அவினாசி-அத்திக்கடவு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் த.மா.கா. சார்பில் கலெக்டரிடம் மனு

அவினாசி-அத்திக்கடவு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று த.மா.கா.வினர் நேற்று கலெக்டரிடம் மனு கொடுத்து முறையிட்டனர்.

Update: 2017-06-12 22:15 GMT
திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் த.மா.கா. திருப்பூர் மாநகர தலைவர் ரவிக்குமார் தலைமையில் விவசாய அணி மாநில தலைவர் புலியூர் நாகராஜன், நிர்வாகிகள் சண்முகம், பொன் சேதுபதி உள்ளிட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், மத்திய அரசு மாட்டு இறைச்சிக்கான தடையை எந்த வித நிபந்தனையும் இன்றி திரும்ப பெற வேண்டும். தமிழக அரசு கிராம கூட்டுறவு வங்கிகளில் 5 ஏக்கருக்கு மேல் நிலம் உள்ளவர்களுக்கும் விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதை சுமார் 60 நாட்களுக்கு பின் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து உள்ளது. எனவே மேல்முறையீட்டை திரும்ப பெற்று கடன் தொகையான ரூ.1,980 கோடியை முழுமையாக தள்ளுபடி செய்து 3 லட்சத்து 2 ஆயிரம் விவசாயிகளை காப்பாற்ற வேண்டும். கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்ட விவசாயிகளுக்கு பாசன வசதி தரும் பவானி ஆற்றின் குறுக்கே கேரளாவில் தடுப்பணைகள் கட்டுவதை மத்திய அரசு தடுக்க வேண்டும். அவினாசி-அத்திக்கடவு பாசன திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கூறியிருந்தனர்.

ஆக்கிரமிப்பு

அவினாசிபாளையம் கோவில்பாளையம் புதூரை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், திருப்பூரில் இருந்து அவினாசிபாளையம் வரை தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி நடக்கிறது. ஒவ்வொரு முறையும் சர்வேயர்கள் அளவீடு செய்யும் போது வெவ்வேறு இடங்களில் அளவீடு செய்து குழப்பம் ஏற்படுத்தி வருகிறார்கள். இதனால் சிலருக்கு வீடு உள்ளிட்டவை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே வீடுகளுக்கு பாதிப்பு இல்லாமல் அளவீடு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் தலைமையில் பொதுமக்கள் அளித்த மனுவில், மாநகராட்சிக்கு உட்பட்ட 24-வது வார்டில் அப்புக்குட்டி லே-அவுட்டில் மாநகராட்சிக்கு சொந்தமான ரிசர்வ் சைட் உள்ளது. இதில் சிலர் ஆக்கிரமிப்பு செய்து கடைகள், வீடுகள் கட்டியிருந்தனர். மாநகராட்சி நிர்வாகத்துக்கு புகார் தெரிவித்ததும் அங்கிருந்த இரண்டு குடிநீர் குழாய் இணைப்பு மட்டும் துண்டிக்கப்பட்டன. மின் இணைப்பு துண்டிக்கப்படவில்லை. இந்த ரிசர்வ் சைட் நிலத்தை முழுவதுமாக மீட்டு அந்த இடத்தில் சமுதாய கூடம், பள்ளிக்கூடம், ஆரம்ப சுகாதார நிலையம், ரேஷன் கடை ஆகியவற்றை கட்டினால் மக்கள் பயன்பெறுவார்கள். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

வீடு கட்ட கடன் உதவி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தெற்கு மாநகர செயலாளர் ராஜகோபால் தலைமையில் வந்தவர்கள் அளித்த மனுவில், மாநகராட்சியின் 50-வது வார்டு பட்டுக்கோட்டையார் நகர் பகுதியில் ஏழை, எளிய மக்கள் 200 பேர் நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்கு மாநகராட்சியில் விண்ணப்பித்தனர். வீடு கட்ட கடன் வழங்குவதற்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்த வித தகவலும் மக்களுக்கு வழங்கப்படவில்லை. இதுகுறித்து கேட்டால் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் தான் தகவல் தெரிவிப்பார்கள் என்கிறார்கள். எனவே வீடு கட்ட மானியத்துடன் கடன் உதவி வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

நல்லூர் நுகர்வோர் நல மன்றம் சார்பில் அளித்த மனுவில், திருப்பூர் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரியில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதி, கிட்னி அறுவை சிகிச்சைக்கு உண்டான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். 100 படுக்கைகளுடன் கொண்ட கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா நடத்தப்படாமல் உள்ளது. இதை விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
பழைய ஆயக்கட்டு


அமராவதி நதிநீர் பாசன பாதுகாப்பு இயக்க பொதுச்செயலாளர் லிங்கம் சின்னசாமி அளித்த மனுவில், அமராவதி அணையில் 30 அடிக்கு மேல் நீர் இருப்பதால் உடனடியாக அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு கிளை வாய்க்கால்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும். இதனால் மக்களுக்கு குடிநீர் மற்றும் கிணறுகளில் தண்ணீர் கிடைக்கும். இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அளித்த மனுவில், நெருப்பெரிச்சல் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை தனியார் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். அந்த இடத்தை மீட்டு வீடு இல்லாத ஏழை, எளியவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்