விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் போலீஸ் வாகனத்தின் கீழ் படுத்து போராட்டம்

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் போலீஸ் வாகனத்தின் கீழ் படுத்து போராட்டம் நடத்தினர்.

Update: 2017-06-12 23:15 GMT
மதுரை,

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் இன்குலாப், அமைப்பு செயலாளர் எல்லாளன் ஆகியோர் தலைமையில் நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட கட்சியினர் நேற்று மதுரை கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்களை போலீசார் கலெக்டர் அலுவலகத்தின் வெளியே தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் அங்கேயே அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அவர்கள் திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டி கிராமத்தில் சாதி வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும். ஆதிதிராவிடர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். பூதிப்புரம் சந்தனமாரியம்மன் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட மோதலில் ஆதிதிராவிட மக்களுக்கு எதிராக செயல்பட்ட உசிலம்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு உள்பட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

கைது செய்வதாக எச்சரிக்கை

அப்போது அங்கு இருந்த போலீசார், அனைவரும் இங்கிருந்து கலைந்து செல்ல வேண்டும் என்றும், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை என்றும் கூறினர். ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் போலீசார், அவர்களை கைது செய்யப் போவதாக அறிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலர் அங்கு இருந்த போலீஸ் வாகனத்தின் கீழ் படுத்து போராட்டம் செய்யத் தொடங்கினர். இதனால் போலீசார் செய்வதறியாது திகைத்தனர். பின்னர் அவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். சுமார் 2 மணி நேரம் வரை நடந்த இந்த போராட்டத்தால் அந்த பகுதி முழுவதும் போக்குவரத்து தடை ஏற்பட்டது.

மேலும் செய்திகள்