தொடர் மழை காரணமாக தண்ணீர் வரத்து அதிகரிப்பு சோலையார் அணையின் நீர்மட்டம் உயர்ந்தது

தொடர் மழை காரணமாக தண்ணீர் வரத்து அதிகரிப்பு சோலையார் அணையின் நீர்மட்டம் 41 அடியாக உயர்ந்தது;

Update:2017-06-14 03:34 IST

வால்பாறை,

வால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக சோலையார் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 41 அடியாக உயர்ந்துள்ளது.

கடும் வறட்சி

வால்பாறை பகுதியில் போதிய அளவு மழை பெய்யாததால் கடும் வறட்சி ஏற்பட்டது. இதன் காரணமாக வனப்பகுதிகளில் செடி, கொடிகள், மரங்கள் காய்ந்தன. வன விலங்குகள் உணவு, தண்ணீர் தேடி வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்தன. மேலும் காட்டுத்தீ ஏற்படுவதை தடுக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதுமட்டுமின்றி பச்சை தேயிலை மகசூல் மிகவும் பாதிக்கப்பட்டது.

மேலும் பரம்பிக்குளம்–ஆழியாறு திட்டத்தின் அடிப்படை அணையான சோலையார் அணைக்கு தண்ணீர் வரத்து மிகவும் குறைந்தது. அணைக்கு தண்ணீர் வரும் நடுமலை ஆறு, சோலையார் சுங்கம் ஆறு, வெள்ளமலை ஆறு, கூழாங்கல் ஆறு ஆகிய ஆறுகளில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டன. இதனால் கடந்த மார்ச் மாதம் 160 அடி உயர கொள்ளளவு கொண்ட சோலையார் அணையின் நீர்மட்டம் 3 அடியாக குறைந்தது.

தொடர் மழை

இந்த நிலையில் கடந்த மே மாதம் 15–ந் தேதி முதல் வால்பாறை பகுதியில் மழை பெய்து வந்தது. இந்த மழையினால் அணைக்கு தண்ணீர் வரத்து படிப்படியாக அதிகரித்தது. இதனிடையே தற்போது வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. கடந்த வாரம் சில நாட்களில் பலத்த மழையும் பெய்து உள்ளது. தொடர் மழையின் காரணமாக வால்பாறை பகுதி முழுவதும் கடும் குளிர் நிலவுகிறது. இதனால் தேயிலைத் தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்களும், பள்ளிக்கூடங்களுக்கு செல்லும் மாணவ–மாணவிகளும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

வால்பாறை பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சோலையார் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் சோலையார் சுங்கம் ஆறு, வெள்ளமலை ஆறு, கூழாங்கல் ஆறு, நடுமலை ஆறு ஆகிய ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

நீர்மட்டம் உயர்ந்தது

நேற்று முன்தினமும், நேற்றும் வால்பாறையில் மழை தூறிக்கொண்டே இருந்தது. ஒரு சில எஸ்டேட் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக நேற்று காலை நிலவரப்படி வால்பாறையில் 15 மி.மீ. மழையும், அப்பர் நீராரில் 46 மி.மீ. மழையும் பதிவாகி இருந்தது. நேற்று முன்தினம் காலை சோலையார் அணையின் நீர்மட்டம் 39.14 அடியாக இருந்தது. தண்ணீர் வரத்து அதிகரித்ததால் நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 41.21 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 462 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

தொடர் மழையினால் வால்பாறை பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில் பச்சை தேயிலை மகசூல் அதிகரித்துள்ளது. இதனால் தேயிலை செடிகள் பச்சை பசேல் என்று காட்சி அளிக்கிறது. மேலும் வனப்பகுதிகளில் உள்ள செடி, கொடிகள், மரங்கள் மீண்டும் பசுமையாக மாறத்தொடங்கி உள்ளன.

மேலும் செய்திகள்