மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வாகனங்கள், கருவிகளுக்கு சரக்கு சேவை வரி விதிப்பு கண்டித்து ஆர்ப்பாட்டம்

மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வாகனங்கள், கருவிகளுக்கு சரக்கு சேவை வரி விதிக்கப்பட்டதை கண்டித்து திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Update: 2017-06-15 23:00 GMT

திருச்சி,

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வாகனங்களுக்கு 18 சதவீதம், பார்வையற்றோருக்கான பிரெய்லி கடிகாரங்கள், தட்டச்சு எந்திரங்களுக்கு 12 சதவீதம், காது கேளாதோருக்கான காதொலி கருவிகளுக்கு 12 சதவீதம், உடல் ஊனமுற்றோர் பயன்படுத்தும் ஊன்று கோல்கள், சக்கர நாற்காலிகள், மூன்று சக்கர சைக்கிள்கள், செயற்கை கால் உள்ளிட்ட உபகரணங்களுக்கு 5 சதவீதம் சரக்கு சேவை வரி விதிக்கப்பட்டு இருப்பதற்கு கண்டனம் தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ரவி தலைமை தாங்கினார். சங்க மாநகர் மாவட்ட தலைவர் ஜெயபால், செயலாளர் கோபிநாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். இதில் மாவட்டம் முழுவதும் இருந்து பல்வேறு வகையான மாற்றுத்திறனாளிகள் நல சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்