வீடுகளில் புகுந்துள்ள மழைநீரை அகற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியல்

முட்டுவாஞ்சேரி கிராமத்தில் வீடுகளில் புகுந்துள்ள மழைநீரை அகற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2017-06-15 23:00 GMT
விக்கிரமங்கலம்,

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே முட்டுவாஞ்சேரி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் வடக்கு தெரு பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த சில தினங்களாக கோடை மழைபெய்து வருகிறது. இதனால் அங்கு தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளது. இதனை தொடர்ந்து வீடுகளில் புகுந்துள்ள மழைநீரை அகற்ற கோரி அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்திருந்தனர்.

சாலை மறியல்

இந்நிலையில் நேற்று முன்தினம் விக்கிரமங்கலம் உள்பட பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளது. சாலைகளில் மழைநீர் தேங்கி சேறும், சகதியாகவும் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் வீடுகளில் புகுந்துள்ள மழைநீரை அகற்ற கோரி முட்டுவாஞ்சேரி கிராம பொதுமக்கள் முட்டுவாஞ்சேரி-விக்கிரமங்கலம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்து விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறி தாழ்வான பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற நட வடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறினர். இதனை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப் பகுதியில் ½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

மேலும் செய்திகள்