கம்பைநல்லூர் அருகே தர்மபுரி மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் சாவு

கம்பைநல்லூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.

Update: 2017-06-16 23:07 GMT

மொரப்பூர்,

தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே உள்ள வகுரப்பம்பட்டியை சேர்ந்தவர் நெடுஞ்சேரலநாதன். இவருடைய மகன் சுதீஸ் (வயது 6). அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 1–ம் வகுப்பு படித்து வந்தான். மாணவனுக்கு நேற்று முன்தினம் திடீரென மர்ம காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் பெற்றோர் கம்பைநல்லூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினர்.

இந்தநிலையில் நேற்று மீண்டும் மாணவன் சுதீசுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் மாணவனை தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் பெற்றோர் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாணவன் சுதீஸ் நேற்று பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து கம்பைநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மர்ம காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் இறந்த சம்பவம் அந்த பகுதி பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொதுமக்கள் கோரிக்கை

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், வகுரப்பம்பட்டியில் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. இதனால் மர்ம காய்ச்சலுக்கு மாணவன் சுதீஸ் இறந்துள்ளான். இந்த கிராமத்தில் கொசுக்களை ஒழிக்க மருந்து அடிக்க வேண்டும். மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து வட்டார மருத்துவ அலுவலர் ஜீவானந்தம் கூறுகையில், டெங்கு காய்ச்சலால் பள்ளி மாணவன் இறந்தானா? அல்லது வேறு காரணம் ஏதும் உண்டா? என்று விசாரணை நடத்தப்படும். மேலும் இந்த கிராமத்திற்கு மருத்துவ குழுவினரை அனுப்பி பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்