ஆண்டிப்பட்டி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

ஆண்டிப்பட்டி அருகே, குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் 2 அரசு பஸ்களையும் அவர்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-06-24 22:30 GMT

ஆண்டிப்பட்டி,

ஆண்டிப்பட்டி அருகே அனுப்பபட்டி கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஏராளமானோர் வசிக்கின்றனர். இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அப்பகுதி மக்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகத்திடம் அப்பகுதி மக்கள் பலமுறை புகார் தெரிவித்தனர்.

ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் அந்த கிராமத்தில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகளும் தண்ணீர் இன்றி வறண்டுவிட்டன. இதனால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு அப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையிலும் பொதுமக்கள் பிரச்சினையை தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், ஆண்டிப்பட்டியில் இருந்து தேனி செல்லும் சாலையில் காலிக்குடங்களுடன் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது தங்கள் பகுதிக்கு உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பினர். அந்த வேளையில் அந்த வழியாக வந்த 2 அரசு பஸ்களை பொதுமக்கள் சிறை பிடித்தனர். தங்களுக்கு குடிநீர் வழங்கப்படும்வரை அந்த பஸ்களை விடப்போவதில்லை என தெரிவித்தனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த ஆண்டிப்பட்டி போலீசார் மற்றும் ஒன்றிய அதிகாரிகள் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அனுப்பபட்டி கிராமத்துக்கு உடனடியாக குடிநீர் வழங்கவும், ஆழ்துளை கிணறுகளை மேலும் ஆழப்படுத்தவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். சிறை பிடித்த பஸ்களையும் விடுவித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்