அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்

கோவையில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். மேலும் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-06-24 23:00 GMT

கோவை,

கோவை மாநகராட்சி 59–வது வார்டு சக்தி நகரில் உள்ள சிவலிங்கபுரத்தில் 100–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் சாலை, தெருவிளக்குகள், மழைநீர் வடிகால், சாக்கடை கால்வாய் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் பல முறை மனுக்கள் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 100–க்கும் மேற்பட்டோர் சக்தி நகர் பிரதான சாலையில் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றியும், காத்திருப்பு போராட்டம் நடைபெற்ற இடத்தை சுற்றியும் கருப்புக்கொடி கட்டியிருந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து தருவதாக உறுதியளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறினார்கள்.

பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்தியவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்று கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்