கொள்ளிடம் ஆற்றில் இருந்து மணல் கடத்திய லாரிகளை சிறைபிடித்து கிராம மக்கள் விடிய விடிய போராட்டம்

கொள்ளிடம் ஆற்றில் இருந்து மணல் கடத்திய லாரிகளை நேற்று முன்தினம் இரவு சிறைபிடித்து கிராம மக்கள் நடத்திய போராட்டம் நேற்று காலை வரையில் நீடித்தது. அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்குபின்னர் இவர்களது போராட்டம் முடிவுக்கு வந்தது.

Update: 2017-06-25 22:45 GMT

காட்டுமன்னார்கோவில்,

காட்டுமன்னார் கோவில் அருகே சி.அரசூர் கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி இயங்கி வருகிறது. இந்த மணல் குவாரிக்கு லாரிகள் வந்து செல்லும் வகையில் சி.அரசூரில் இருந்து வெல்லூர் கிராமம், கீழபருத்திகுடி, மேல பருத்திகுடி கிராமத்தின் வழியாக குமராட்சியை சென்றடையும் வகையில் கொள்ளிடம் ஆற்றின் உள்பகுதியில் மண் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இந்த நிலையில், இந்த குவாரிக்கு வந்த சில லாரிகள் வெல்லூர் கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் இருந்து நேற்று முன்தினம் இரவு மணல் அள்ளினர். இதுபற்றி தகவல் அறிந்த அந்த பகுதி மக்கள், தங்கள் பகுதியில் மணல் எடுக்க அனுமதி ஏதும் கொடுக்கவில்லை. இதனால் லாரிகளில் மணலை கடத்தி செல்வதாக கூறி, 13 லாரிகளை சிறைபிடித்து போராட்டம் செய்தனர். அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வராததால் விடிய, விடிய இந்த போராட்டம் நடந்தது.

பேச்சுவார்த்தை

இந்நிலையில் நேற்று காலை 10 மணிக்கு, சிதம்பரம் கோட்டாட்சியர் ராஜேந்திரன், காட்டுமன்னார்கோவில் தாசில்தார் ஜெயந்தி மற்றும் குமராட்சி போலீசார் நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில், வெல்லூர் கிராமப்பகுதி கொள்ளிடம் ஆற்றில் மணல் எடுக்க அனுமதி இல்லாத நிலையில், இவர்கள் எப்படி மணல் எடுக்க முடியும். இரவோடு இரவாக இங்கிருந்த மணலை கடத்தி செல்ல முற்பட்டதாகவும், இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

இதையடுத்து மணல் கடத்தலில் ஈடுபட்ட 13 லாரிகளை குமராட்சி போலீசார் பறிமுதல் செய்து, அதை ஓட்டி வந்த 13 டிரைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த விசாரித்து வருகின்றனர்.

கலெக்டர் ஆய்வு

இதற்கிடையே கிராம மக்களின் போராட்டம் பற்றி தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் ராஜேஷ், வெல்லூர் கிராமத்திற்கு சென்று நேரில் பார்வையிட்டார். பின்னர் அரசு மணல் குவாரி இயங்கி வரும் சி.அரசூர் கிராமத்திற்கு சென்று கொள்ளிடம் அற்று பகுதியை பார்வையிட்ட கலெக்டர் ராஜேஷ், பொதுமக்களின் எந்தவித புகார்களுக்கும் இடமளிக்காமல் நல்ல முறையில் குவாரியை இயக்க வேண்டும். மேலும் பொதுமக்களுக்கு இடையூறுகள் இல்லாமல், இரவு நேரங்களில் மணல் எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அறுவுரை வழங்கினார்.

அப்போது அவருடன் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆனந்த்ராஜ், கொள்ளிடம் வடிநில கோட்ட செயற்பொறியாளர் ராமமூர்த்தி, சுரங்கவியல் மற்றும் கண்காணிப்பு உபகோட்ட உதவி செயற்பொறியாளர் அசோகன், சிதம்வரம் கோட்டாட்சியர் ராஜேந்திரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்