துணை சபாநாயகர் தம்பிதுரை 4-ம் தர அரசியலை நடத்தி வருகிறார் கே.பி.முனுசாமி பேட்டி

பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை 4-ம் தர அரசியலை நடத்தி வருகிறார் என்று முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறினார்.

Update: 2017-06-25 22:30 GMT
தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றிய அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா அணி) அலுவலகம் அதியமான்கோட்டை காலபைரவர் கோவில் அருகில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகம் திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் அரங்கநாதன் தலைமை தாங்கினார். இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க. 2 அணிகளாக பிரிந்துள்ளது. இந்த 2 அணிகளும் இணைவதற்கு சசிகலா குடும்பத்தினர் கட்சியை விட்டு வெளியேற வேண்டும். ஜெயலலிதாவின் மர்ம மரணத்திற்கு நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான புரட்சித்தலைவி அம்மா அணியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற தற்போதுள்ள அமைச்சர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை.

4-ம் தர அரசியல்

இந்த நிலையில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது அ.தி.மு.க.வில் எந்த பிரிவும் இல்லை, எங்களுக்குள் கருத்து வேறுபாடுதான் உள்ளது என்று கூறியுள்ளார். மேலும் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை நானே நேரில் சந்தித்து பேசினேன் என்று நடக்காத சம்பவத்தை கூறியுள்ளார். தம்பிதுரை 4-ம் தர அரசியலை நடத்தி வருகிறார். அவருக்கு எங்களது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். தம்பிதுரை, டி.டி.வி. தினகரன், திவாகரன், ஒரு சில அமைச்சர்கள் கட்சியில் நாடகத்தை அரங்கேற்றி அ.தி.மு.க.வை சசிகலா வசம் ஒப்படைக்க முயற்சி செய்கின்றனர்.

அ.தி.மு.க. 2 அணிகளும் இணைய வேண்டும் என்று பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டாலும் அதனை ஒரு சிலர் கெடுத்து வருகின்றனர். ஒட்டுமொத்த அ.தி.மு.க.வும் ஒரு தலைவரின் கீழ் வரும் என்பதால் இணைப்பை அவர்களாகவே கெடுக்கின்றனர். ஒரு வேளை 2 அணிகளும் இணைந்தால் இப்போதுள்ள வாழ்வு, தான்தோன்றிதனமாக செயல்படுவது போன்றவை கட்டுப்படுத்தப்படும் என்பதால் அவர்களாகவே கெடுக்கின்றனர். இரட்டை இலை சின்னத்தை பெறுவது தொடர்பாக எங்கள் அணி தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்த ஆவணங்கள் மட்டுமே உண்மையாக பிரமாண பத்திரங்களாகும்.

செயலற்று கிடக்கிறது

தமிழகத்தில் மக்களை பற்றி சிந்திக்காமல் ஜெயலலிதாவின் திட்டங்களை நிறைவேற்றாமல் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு செயலற்று கிடக்கிறது. ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு தமிழக அரசு கலைக்கப்படும் என்று கூறுவது ஒரு யூகம் தான். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை கலைக்க முடியாது.

இவ்வாறு கே.பி.முனுசாமி கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் அசோக்குமார் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ. சிங்காரம், முன்னாள் நகராட்சி தலைவர் சுமதி, காரிமங்கலம் ஒன்றிய செயலாளர் குமார், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் தகடூர் விஜயன், நிர்வாகிகள் மாதேஸ், பழனி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்