உள்ளாட்சி தேர்தலை தமிழக அரசு நடத்த தயங்குகிறது ஜி.கே.வாசன் பேட்டி

உள்ளாட்சி தேர்தலை தமிழக அரசு நடத்த தயங்குகிறது என்று ஜி.கே.வாசன் கூறினார்.

Update: 2017-06-25 22:45 GMT
திருமானூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் பகுதியில் விழுப்பனங்குறிச்சி, கரையான்குறிச்சி, மேலவரப்பன்குறிச்சி, அழகியமணவாளன், மாத்தூர், காமரசவல்லி உள்ளிட்ட இடங்களில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் தமிழ் மாநில காங்கிரஸ் மாநில தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

உள்ளாட்சி தேர்தல்

தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டசபையில் உள்ளாட்சி அதிகாரிகளின் பதவி காலத்தை 6 மாதமாக நீட்டிக்க மசோதா தாக்கல் செய்யப்பட்டது உள்ளாட்சி தேர்தல் நடக்குமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் உள்ளாட்சி தேர்தலை தமிழக அரசு நடத்த தயங்குகிறது.

மத்திய அரசு அமல்படுத்தி உள்ள ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு குறித்து பொதுமக்களுக்கு முன்கூட்டியே விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்க வேண்டும். தற்போது மத்திய அமைச்சர்களை வைத்து ஒருசில இடங்களில் ஜி.எஸ்.டி. விழிப்புணர்வு கூட்டம் நடத்தி வருவது பயனற்றது. ஏழை, எளிய மக்களுக்கும் ஜி.எஸ்.டி. வரி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தொடர்ந்து, இலங்கை அரசு தமிழக மீனவர்களை தாக்கி வருவது குறித்து மத்திய அரசு உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். இதுகுறித்து தமிழக முதல்-அமைச்சர் மத்திய அரசுக்கு கடிதம் மட்டும் எழுதினால் போதாது. ஜனாதிபதி கட்சி பாகுபாடின்றி பொதுவானவர் என்பதால் அனைவரும் ஒருமித்த கருத்தோடு தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது த.மா.கா. கட்சியின் ஒருமித்த கருத்து. தற்போது, போட்டி சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வாக்களிக்க தகுதியுள்ளவர்கள் தங்களது மனசாட்சிபடி வாக்களித்து ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க வேண்டும்.

பேப்பர் ஆலை அமைக்க வேண்டும்

அரியலூர் மாவட்டத்தில் நீராதாரத்தை பெருக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட பருத்தி, மக்காச்சோளம், வெங்காயம் உள்ளிட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் தைலமரங்கள் அதிகம் சாகுபடி செய்வதால் ஜெயங்கொண்டம் பகுதியில் பேப்பர் ஆலை அமைக்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள ரூ.2 ஆயிரம் கோடி தொகையை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் பயிர் கடன்களை தள்ளுபடி செய்து புதிய கடன்களை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.எம்.குமார், மாவட்ட பொருளாளர் சுப்பிரமணியன், மாவட்ட துணைத்தலைவர் பழனிசாமி, மாநில விவசாயிகள் அணி துணைத்தலைவர் கைலாசம், மாவட்ட இளைஞரணி தலைவர் சுரேஷ், வட்டார இளைஞரணி தலைவர் தினேஷ்குமார் உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்