ரத்து செய்ய எதிர்ப்பு தமிழக அரசு நீட் தேர்வு ரேங்க் பட்டியலை வெளியிட வேண்டும்

தமிழக அரசு நீட் தேர்வின் அடிப்படையில் ரேங்க் பட்டியலை வெளியிட வேண்டும் என்று கோவையில் நீட் தேர்வு ஆதரவு மாணவர்கள் குழுவினர் பேட்டி அளித்து உள்ளனர்.

Update: 2017-07-26 22:30 GMT

கோவை,

நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு ஒரே மாதிரியான தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக நீட் தேர்வு நடத்தப்பட்டது. இந்த நீட் தேர்விற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் தமிழக அரசு நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்க அளிக்கும் வகையில் சட்டம் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் கோவையில் நீட் தேர்வு ஆதரவு மாணவர்கள் குழு என்ற அமைப்பை சேர்ந்த சிறில் ராஜன், கார்த்திக் திருமூர்த்தி, ஸ்வேதா உள்ளிட்ட 30–க்கும் மேற்பட்ட மாணவ– மாணவிகள், அவர்களின் பெற்றோர்கள் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:–

தமிழக அரசு நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் முடிவிற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். நாங்கள் நீட் தேர்விற்காக மிகவும் கஷ்டப்பட்டு படித்து உள்ளோம். தமிழக அரசு நடந்து முடிந்த நீட் தேர்வின் ரேங்க் பட்டியலை வெளியிடாமல் வைத்து உள்ளது. இந்த ரேங்க் பட்டியலை வெளியிட்டால்தான் கிராப்புற மாணவ–மாணவிகள் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது தெரியவரும்.

நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டால் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் அதிகளவு கட்டணம் செலுத்தி படிக்க வேண்டிய நிலை ஏற்படும். கடந்த ஆண்டை விட, நடப்பாண்டில் மருத்துவத்திற்கு அதிக அளவிலான மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். மேலும் நீட் தேர்வில் தமிழில் எளிதான கேள்விகள்தான் கேட்கப்பட்டு இருந்தது. தமிழக அரசு நீட் தேர்வை ரத்து செய்தால், நாங்கள் அதனை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர்வோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்