கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு: மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரேநாளில் 1¼ அடி உயர்வு

கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டதன் காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரேநாளில் 1¼ அடி உயர்ந்தது.

Update: 2017-07-26 23:00 GMT

மேட்டூர்,

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை இன்று வரை தமிழகத்துக்கு கை கொடுக்கவில்லை. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மிகவும் குறைந்த அளவிலேயே இருந்து வந்தது. ஆனாலும் கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து கடந்த மாதம் இறுதியில் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இந்த தண்ணீர் தமிழக – கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது. அங்கிருந்து ஒகேனக்கல் வழியாக கடந்த 8–ந்தேதி மேட்டூர் அணையை வந்து சேர்ந்தது. நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் சற்று அதிகரித்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கர்நாடகத்தில் பெய்து வரும் மழை அளவு அதிகரித்து உள்ளதால் அங்குள்ள அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் அளவு மேலும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்து இருக்கிறது. இதனால் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

நேற்று முன்தினம் 26.74 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலை 28 அடியாக உயர்ந்தது. ஒரேநாளில் அணை நீர்மட்டம் 1¼ அடி உயர்ந்து உள்ளது. நீர்வரத்து மேலும் அதிகரிக்குமானால் அணை நீர்மட்டம் வேகமாக உயரும் வாய்ப்புள்ளது.

மேலும் செய்திகள்