மத்திய அரசிடம் புகார் தெரிவிக்க உள்ள நிலையில் கவர்னர் கிரண்பெடி, அமைச்சர்களுடன் திடீர் ஆலோசனை

கவர்னர் மீது மத்திய அரசிடம் புகார் தெரிவிக்க காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் முடிவு செய்துள்ள நிலையில் கிரண்பெடி நேற்று அமைச்சர்களுடன் திடீர் ஆலோசனை நடத்தினார்.

Update: 2017-07-26 23:45 GMT

புதுச்சேரி,

புதுச்சேரி அமைச்சரவைக்கும், கவர்னர் கிரண்பெடிக்கும் அரசு தொடர்பான பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்தநிலையில் கவர்னர் கிரண்பெடியை திரும்பப்பெறக்கோரி மத்திய அரசை வலியுறுத்துவதற்காக காங்கிரஸ் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் வருகிற 30–ந்தேதி டெல்லி சென்று ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மத்திய மந்திரிகளை சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.

இந்தநிலையில் கார்கில் வெற்றிதின விழாவில் கவர்னர் கிரண்பெடி கலந்து கொண்டு வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு நேற்று மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் நமச்சிவாயம், ஷாஜகான், கமலக்கண்ணன் ஆகியோரும் கலந்து கொண்டனர். அப்போது அவர்களிடம் கவர்னர் கிரண்பெடி சில ஆலோசனைகளை வழங்கினார்.

அமைச்சர் நமச்சிவாயத்திடம், குருமாம்பேட்டில் உள்ள குப்பை கிடங்கில் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் பணி செயல்படாமல் முடங்கி உள்ளது. அதை மீண்டும் செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அமைச்சர் ஷாஜகானிடம், சாலைப்போக்குவரத்துக் கழகத்துக்கு தனியாக மேலாண் இயக்குனரை நியமித்து செயல்பாடுகளை சீரமையுங்கள் என்று தெரிவித்தார். அமைச்சர் கமலக்கண்ணனிடம் சென்டாக் கமிட்டியில் தேசிய விருதுபெற்ற கல்வியாளர்களை நியமிக்கவேண்டும், அடுத்த கல்வியாண்டில் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்த ஏற்பாடு செய்யுங்கள் என்று தெரிவித்தார்.

மேலும் துறைரீதியாக எந்த ஒரு பிரச்சினைக்கும் தன்னை நேரடியாக சந்திக்கலாம் என்று அமைச்சர்களிடம் தெரிவித்தார். கவர்னர் கிரண்பெடிக்கும் அமைச்சரவைக்கும் மோதல் உச்சகட்டத்தில் உள்ள நிலையில் கவர்னர் கிரண்பெடி அமைச்சர்களுக்கு ஆலோசனை வழங்கியது புதுவை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

அதைத்தொடர்ந்து கவர்னர் கிரண்பெடி நிருபர்களிடம் கூறியதாவது:–

தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 65 சதவீத இடங்களை அரசு இடஒதுக்கீடாக பெறுகின்றனர். அங்கு சட்டம் இயற்றியதுபோல் புதுவையிலும் சட்டம் நிறைவேற்றி இருந்தால் நமக்கும் கூடுதலாக இடங்கள் கிடைத்து இருக்கும். ஆனால் இந்த ஆண்டு 36 சதவீத இடங்கள்தான் அரசு இடஒதுக்கீடாக கிடைத்துள்ளது.

மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி கடிதம் கொடுப்பதும், ஆண்டுதோறும் அங்கீகாரம் கொடுப்பதும் மாநில அரசுதான். நாம் சட்டம் நிறைவேற்றி இருந்தால் அவர்களை கட்டுப்படுத்தி கூடுதல் இடங்களை பெற்று இருக்கலாம். இனியும் தாமதிக்காமல் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் இடங்களை பெற சட்டம் இயற்ற வேண்டும்.

இதற்காக சிறப்பு சட்டமன்றத்தை கூட்ட அ.தி.மு.க. கடித9ம் கொடுத்துள்ளது. இது வரவேற்கத்தக்கது. சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி சட்டம் நிறைவேற்றினால் அதற்கு ஒப்புதல் பெற மத்திய அரசிடம் பேசி விரைவான நடவடிக்கையை நான் எடுப்பேன். மேலும் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களை நீட் தேர்வுக்கும் தயார்படுத்த வேண்டும்.

சென்டாக் கமிட்டியும் மாற்றியமைக்கப்பட வேண்டும். இந்த கமிட்டியில் தேசிய விருதுபெற்ற கல்வியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு கவர்னர் கிரண்பெடி கூறினார்.

மேலும் செய்திகள்