வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

செங்கத்தை அடுத்துள்ள பக்கிரிபாளையம் ஊராட்சியில் சுமார் 3 ஆயிரத்து 500 பேர் வசிக்கின்றனர்.

Update: 2017-07-26 23:04 GMT

செங்கம்,

செங்கத்தை அடுத்துள்ள பக்கிரிபாளையம் ஊராட்சியில் சுமார் 3 ஆயிரத்து 500 பேர் வசிக்கின்றனர். இங்கு தண்ணீர் மற்றும் அடிப்படை வசதி செய்து தராததாக கூறி ஊராட்சி செயலாளர் மற்றும் பம்ப் ஆபரேட்டரை இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி பக்கிரிபாளையம் கிராம பொதுமக்கள் நேற்று செங்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் கருணாகரனிடம் மனு ஒன்றை அளித்தனர். அவர்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் கருணாகரன், சக்திவேல் மற்றும் செங்கம் சப்–இன்ஸ்பெக்டர் கணபதி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், ‘‘இந்த ஊராட்சியில் அனுமதியின்றி பல குடிநீர் இணைப்புகள் உள்ளன. வீடுகளுக்கு மட்டுமின்றி அங்குள்ள சில கடைகளுக்கும் அனுமதியின்றி குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் தொடர்ந்து குடிநீர் வழங்குவதில்லை. பழுதடைந்துள்ள ஆழ்துளை கிணறு மற்றும் மின் மோட்டார்களை சரி செய்யாமல் அதிகாரிகள் காலதாமதம் செய்கின்றனர். இது குறித்து ஊராட்சி செயலாளரிடமும், வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் பல முறை புகார் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை’’ என்றனர். இந்த பிரச்சினை குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது. இதனையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


மேலும் செய்திகள்