கோவிலில் திருவிழா நடத்த எதிர்ப்பு: இரு தரப்பினர் வாக்குவாதம்-பெண்கள் தீக்குளிக்க முயற்சி

சேலம் கிச்சிபாளையத்தில் உள்ள அம்மன் கோவிலில் திருவிழா நடத்த எதிர்ப்பு தெரிவித்ததால் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பெண்கள் தீக்குளிக்க முயன்றதோடு சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், அங்குள்ள கடைகளும் அடைக்கப்பட்டன.

Update: 2017-08-02 23:15 GMT
சேலம்,

சேலம் கிச்சிபாளையம் கரீம் காம்பவுண்ட் தெருவில் கஞ்சி தொட்டி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் இருக்கும் பகுதியில் ஒரு தரப்பினரை சேர்ந்த 100 குடும்பத்தினரும், மற்றொரு பிரிவினரை சேர்ந்த 13 குடும்பத்தினரும் வசித்து வருகின்றனர். சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா நடைபெறும் நாட்களில் கஞ்சி தொட்டி மாரியம்மன் கோவிலிலும் ஒரு தரப்பினர் திருவிழா நடத்துவது வழக்கம்.

அதன்படி நேற்று மதியம் 2 மணியளவில் கரீம் காம்பவுண்ட் தெருவில் வசிக்கும் ஒரு தரப்பினரை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்று சேர்ந்து கஞ்சி தொட்டி மாரியம்மன் கோவிலில் உள்ள அம்மனுக்கு மஞ்சள் பூசி, விளக்கு வைத்து பூஜையில் ஈடுபட்டனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, அங்கிருந்த பெண்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், அம்மன் கோவிலில் திருவிழா நடத்தக்கூடாது என்று கூறியதால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியது.

இதனால் ஆவேசம் அடைந்த பெண்கள் திடீரென தங்களது வீடுகளில் இருந்து மண்எண்ணெய் கேன்களை எடுத்து வந்தனர். பின்னர், அவர்கள் கோவில் முன்பு அமர்ந்து உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அப்பகுதியில் வேகமாக பரவியதால் இருதரப்பினரை சேர்ந்த ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

இதுகுறித்து அறிந்த போலீஸ் துணை கமிஷனர் சுப்புலட்சுமி, உதவி கமிஷனர் அன்பு, இன்ஸ்பெக்டர்கள் சரவணன், குமார், குமரேசன் மற்றும் போலீசார் அங்கு வந்தனர். பிறகு இரு தரப்பினரிடமும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் ஒரு தரப்பினர் கோவிலில் திருவிழாவை நடத்துவோம் என்றும், அதற்கு மற்றொரு தரப்பினர் திருவிழாவை நடத்த விடமாட்டோம் என்றும் கூறி கோஷங்களை எழுப்பினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. அப்போது ஒரு தரப்பினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இது ஒருபுறம் இருக்க, கிச்சிபாளையம் மெயின்ரோட்டில் ஒரு தரப்பினரும், பிரிவு ரோட்டில் மற்றொரு தரப்பினரும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் மீண்டும் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. அந்த பகுதியில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதனிடையே மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் சம்பவ இடத்திற்கு வந்து இரு தரப்பினரிடமும் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், சேலம் உதவி கலெக்டர் குமரேஸ்வரன், தாசில்தார் (பொறுப்பு) மாதேஸ்வரன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளும் அங்கு வந்தனர்.

அப்போது, சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக கஞ்சி தொட்டி மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா நடத்தி வருவதாகவும், ஆனால் தற்போது மட்டும் எதிர்ப்பு தெரிவிக்க என்ன காரணம் என்று ஒரு தரப்பினர் போலீசாரிடம் தெரிவித்தனர். இதை கேட்ட போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார், அந்த தகவலை மற்றொரு தரப்பினரிடம் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து இரு தரப்பிலும் தலா 5 பேர் வீதம் பேச்சுவார்த்தைக்கு வருமாறும், இந்த பிரச்சினையை பேசி தீர்த்துக்கொள்ளலாம் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இதனால் சமாதானம் அடைந்த இரு தரப்பினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

இருதரப்பினரும் மோதிக்கொள்ளும் சூழல் உருவானதையொட்டி கிச்சிபாளையம் பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்