ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் 7 பவுன் நகை கொள்ளை போலீஸ்போல் நடித்து கைவரிசை

நாகர்கோவிலில், போலீஸ்போல் நடித்து, மயக்க மருந்து தெளித்த கைக்குட்டையை முகத்தில் அழுத்தி ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் 7 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற 2 பேரை போலீசார் தேடிவருகிறார்கள். இந்த துணிகர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-;

Update:2017-08-12 04:30 IST
நாகர்கோவில்,

நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோட்டை சேர்ந்தவர் நெல்சன். இவர் ஒரு வங்கியில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவருடைய மனைவி சேண்டி ஜெரால்டி (வயது 73), ஓய்வு பெற்ற ஆசிரியை. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் சேண்டி ஜெரால்டி நேற்று காலை அப்பகுதியில் உள்ள ஆலயத்துக்கு பிரார்த்தனை செய்வதற்காக சென்றார். வாட்டர் டேங்க் ரோட்டில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே சென்றபோது, 2 பேர் அவரை வழிமறித்தனர்.

போலீஸ்...

அவர்கள் 2 பேரும் தங்களை போலீஸ் என்று அறிமுகப்படுத்தி கொண்டனர். பின்னர், ‘நகை திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே திருடர்களை பிடிப்பதற்காக இன்ஸ்பெக்டர் இந்த பகுதியில் சோதனை செய்துகொண்டு இருக்கிறார். நீங்கள் நகையை அணிந்து சென்றால் திட்டுவார். எனவே உங்களது நகையை கழற்றி தாருங்கள். அதை நாங்கள் பத்திரப்படுத்தி தருகிறோம்‘ என்று 2 பேரும், சேண்டி ஜெரால்டியிடம் தெரிவித்தனர்.

7 பவுன் நகை கொள்ளை

உடனே சேண்டி ஜெரால்டி தான் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் நகையை கழற்றி அவர்களிடம் கொடுத்தார். பின்னர் அந்த 2 பேரும் ஒரு கைக்குட்டையை எடுத்து அதில் நகையை வைத்தனர். பிறகு கைக்குட்டையுடன் சேர்த்து நகையை கொடுப்பதுபோல் நடித்து சேண்டி ஜெரால்டி முகத்தில் வைத்து அழுத்தினார்கள். அந்த கைக்குட்டையில் மயக்க மருந்து தெளித்து இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் சேண்டி ஜெரால்டி மயக்கம் அடைந்து ரோட்டின் ஓரம் ஒரு சுவரில் சாய்ந்தபடி உட்கார்ந்தார். இதற்கிடையே, 2 பேரும் நகையை கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்றுவிட்டனர்.

சுமார் ஒரு மணி நேரம் கழித்து மயக்கம் தெளிந்து சேண்டி ஜெரால்டி கண்விழித்தார். அப்போது நகை கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நேசமணிநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாய்லட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சேண்டி ஜெரால்டியிடம் விசாரணை நடத்தினர். அப்போது 2 நபர்களில் ஒருவர் வடமாநில வாலிபர் போல இருந்ததாக அவர் கூறினார்.

கண்காணிப்பு கேமரா

கொள்ளை சம்பவம் நடந்த இடத்துக்கு அருகே உள்ள ஒரு வீட்டில் கண்காணிப்பு கேமரா உள்ளது. அந்த கண்காணிப்பு கேமராவில் கொள்ளை நடந்த காட்சியும், மர்ம நபர்களின் உருவமும் பதிவாகி இருக்கும் என்று போலீசார் சந்தேகித்துள்ளனர்.
எனவே கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது.

பட்டப்பகலில் போலீஸ்போல் நடித்து கைவரிசை காட்டிய 2 மர்ம நபர்களையும் போலீசார் தேடிவருகிறார்கள்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்