சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை

சூளகிரியில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2017-08-11 22:23 GMT
சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் வாணியர் தெரு, கோட்டை தெரு ஆகிய பகுதிகள் உள்ளன. இங்கு 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன. இந்த பகுதியில் கடந்த 6 மாதமாக கடுமையான குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள். இதுகுறித்து அவர்கள் பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் அந்த பகுதி பொதுமக்கள் குடிநீரை வெளியில் பணம் கொடுத்து வாங்க வேண்டிய நிலைமை இருப்பதாக புகார் தெரிவித்தனர். இந்த நிலையில் அந்த பகுதி பெண்கள் காலிக்குடங்களுடன் திரண்டு வந்து சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்னபூரணி, சுந்தரபாஸ்கர் ஆகியோர் அங்கு சென்று காலிக்குடங்களுடன் வந்த பெண்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். சூளகிரி வாணியர் தெரு, கோட்டை தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு சீராக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்