மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.450 கோடி வங்கி கடன் வழங்க இலக்கு

ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவன மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிகள் மூலமாக 2017-2018-ம் ஆண்டு ரூ.450 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக செயல்திட்ட கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

Update: 2017-08-12 22:45 GMT
கிருஷ்ணகிரி,

ஐ.வி.டி.பி. தன்னார்வ தொண்டு நிறுவனமானது கிருஷ்ணகிரியை தலைமையிடமாகக் கொண்டு கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது. இதில் 11,300 மகளிர் சுயஉதவிக்குழுக்களும், அதில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களும் உள்ளனர்.

ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவன தலைவரும், ராமன் மகசேசே விருது பெற்றவருமான குழந்தை பிரான்சிஸ் தலைமையில் பல்லவன் கிராம வங்கி, இந்தியன் வங்கி மற்றும் பாங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகளுடன் 2017-2018-ம் ஆண்டிற்கான ஆண்டு செயல்திட்ட கூட்டம் ஐ.வி.டி.பி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் இந்தியன் வங்கி மேலாளர்களுக்கான செயல்திட்ட கூட்டத்தில் தர்மபுரி மண்டல மேலாளர் விஜயகுமார் மற்றும் துணை மண்டல மேலாளர் சுவாமிநாதன் மற்றும் இந்தியன் வங்கி மேலாளர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் 16 கிளைகளில் உள்ள 3,520 ஐ.வி.டி.பி மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.150 கோடி வங்கிக்கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்தனர்.

இதேபோல பல்லவன் வங்கிக்கான கூட்டத்திற்கு பல்லவன் கிராம வங்கி தலைவர் சுரேஷ்குமார், பொதுமேலாளர் சந்தோஷ்குமார் வட்டார மேலாளர் ஜெயக்குமார், பல்லவன் கிராம வங்கி மேலாளர்களும் கலந்து கொணடு 20 கிளைகளில் உள்ள 6,600 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.240 கோடி வங்கிக்கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்தனர்.

பாங்க் ஆப் வங்கிக்கான கூட்டத்தில் ஐ.வி.டி.பி குழுக்கள் செயல்படும் கிருஷ்ணகிரி மற்றும் தொகரப்பள்ளி கிளைகளில் இருந்து கிளை மேலாளர்களும், வங்கி அலுவலர்களும் கலந்து கொண்டு பாங்க் ஆப் இந்தியா வங்கி செயல்படும் 974 ஐ.வி.டி.பி மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.40 கோடி வங்கிக்கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்தனர்.

இந்த கலந்தாய்வு மற்றும் செயல்திட்ட கூட்டத்தில் ஐ.வி.டி.பி பணியாளர்கள் கலந்து கொண்டு வங்கிகளில் ஐ.வி.டி.பி மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை எடுத்துக் கூறினார்கள். வங்கியாளர்கள் அவற்றை தீர்ப்பதற்கான வழிமுறைகளை எடுத்து கூறினார்கள். இதுகுறித்து ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவன தலைவர் குழந்தை பிரான்சிஸ் கூறியதாவது:-

சமுதாயத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள ஏழை பெண்களை பொருளாதார ரீதியாக உயர்த்தி அவர்களை சுயசார்புடையவர்களாகச் செய்வதே ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவன நோக்கமாகும். ஐ.வி.டி.பி தொண்டு நிறுவனத்தின் நேர்மையான நிர்வாகத்தையும், சீரான திட்டமிடுதலையும் பார்த்து வங்கிகள் கடன் கொடுக்க முன்வருகின்றன. ஐ.வி.டி.பி மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு இந்த ஆண்டு ரூ.450 கோடி வங்கிக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்