போலீசார் அனுமதித்த வழித்தடத்தில் சிலைகளை எடுத்து செல்ல வேண்டும் கலெக்டர் பேச்சு

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி வைக்கப்படும் சிலைகளை கரைப்பதற்கு போலீசார் அனுமதித்த வழித்தடத்தில் மட்டுமே எடுத்து செல்ல வேண்டும் என்று கலெக்டர் பொன்னையா தெரிவித்தார்.

Update: 2017-08-12 22:45 GMT

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் பொன்னையா தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:–

காஞ்சீபுரம் மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு காஞ்சீபுரத்தில் பொன்னேரிக்கரை, மதுராந்தகம் ஏரி, செய்யூர் வட்டத்தில் ஆலம்பரைகுப்பம், வடபட்டினம்குப்பம், கடலூர் குப்பம், தழுதாலிகுப்பம், பரமன்கேணிகுப்பம், திருக்கழுக்குன்றம் வட்டத்தில் சதுரங்கப்பட்டினம் குப்பம், மாமல்லபுரம் கடற்கரை, திருப்போரூர் வட்டத்தில் கோவளம் கடற்கரை, சோழிங்கநல்லூர் வட்டத்தில் நீலாங்கரை கடற்கரை, பல்கலைநகர் கடற்கரை போன்ற இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அனுமதித்த வழித்தடத்தில்

மேலும் விநாயகர் சிலைகளை போலீசாரின் அனுமதி பெற்றே வைக்க வேண்டும். விநாயகர் சிலைகள் களிமண்ணால் தயாரித்து இருக்க வேண்டும். சிலைகள் சுடபடாததாகவும், ரசாயனம் பூசப்படாததாகவும் இருக்க வேண்டும். சிலைகளுக்கு மேல் ஓலைக்கொட்டகை அமைக்க கூடாது. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை சிலைகளுக்கு அருகில் வைக்ககூடாது. வரையறுக்கப்பட்ட உயரத்திற்கு மேல் சிலைகள் இருக்கக்கூடாது.

கடற்கரையில் இருந்து 500 மீட்டருக்கு அப்பால் படகு மூலம் கொண்டு சென்று சிலைகளை கரைக்க வேண்டும். சிலைகளை கரைப்பதற்கு முன்பு பூஜைபொருட்கள், அலங்காரப்பொருட்களை அகற்ற வேண்டும். போலீசார் அனுமதித்த வழித்தடத்தில் மட்டுமே சிலைகளை கரைப்பதற்கு எடுத்து செல்லவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் சப்–கலெக்டர் கில்லி சந்திரசேகர், மாவட்ட வன அலுவலர் ராம்மோகன் மற்றும் போலீஸ் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்