பெங்களூருவில் இந்திரா மலிவு விலை உணவக திட்டத்தை ராகுல்காந்தி தொடங்கி வைக்கிறார்

பெங்களூருவில் 16–ந் தேதி நடைபெறும் விழாவில் இந்திரா மலிவு விலை உணவக திட்டத்தை ராகுல்காந்தி தொடங்கி வைக்க இருப்பதாக மாநகராட்சி மேயர் பத்மாவதி தெரிவித்துள்ளார்.

Update: 2017-08-12 22:19 GMT

பெங்களூரு,

பெங்களூரு மாநகராட்சி மேயர் பத்மாவதி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

பெங்களூருவில் உள்ள ஏழை, எளிய மக்கள் 3 நேரமும் உணவு சாப்பிட வேண்டும் என்ற நோக்கத்தில் முதல்–மந்திரி சித்தராமையா இந்திரா மலிவு விலை உணவக திட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்தார். பெங்களூரு மாநகராட்சியில் உள்ள 198 வார்டுகளுக்கும், ஒரு உணவகம் வீதம் மொத்தம் 198 உணவகம் திறக்கப்படும் என்றும் முதல்–மந்திரி அறிவித்து இருந்தார். அதன்படி, பெங்களூருவில் இந்திரா உணவகம் அமைக்கும் பணி கடந்த 2 மாதங்களாக தீவிரமாக நடைபெற்று வந்தது. தற்போது அந்த பணிகள் முடிவடைந்துள்ளன.

இதனால் வருகிற 16–ந் தேதி பெங்களூரு மாநகராட்சியில் உள்ள 101 வார்டுகளில் முதற்கட்டமாக இந்திரா மலிவு விலை உணவகம் செயல்பட உள்ளது. அன்றைய தினம் நடைபெறும் விழாவில் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டு ஜெயநகரில் உள்ள இந்திரா மலிவு விலை உணவகத்தை திறந்துவைப்பதன் மூலம் இந்த திட்டத்தை தொடங்கிவைக்கிறார்.

இந்த திட்டம் அறிவிக்கப்பட்ட 60 நாட்களில் இந்திரா உணவகம் அமைக்கும் பணிகள் துரிதமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. தினமும் காலை 7.30 மணியில் இருந்து 9.30 மணி வரையும், மதியம் 12.30 மணியில் இருந்து 2.30 மணி வரையும், இரவில் 7.30 மணியில் இருந்து 9.30 மணிவரையும் இந்திரா உணவகம் திறந்திருக்கும். காலை உணவு ரூ.5–க்கும், மதியம் மற்றும் இரவில் ரூ.10–க்கும் சாப்பாடு வழங்கப்படும். இதன் மூலம் மலிவு விலையில் ஏழை, எளிய மக்கள் தரமான உணவு வகைகளை சாப்பிட முடியும்.

ஒரே நேரத்தில் 198 வார்டுகளிலும் இந்திரா உணவகம் அமைக்க வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் சில பணிகள் முடிவடையாத காரணத்தால் 101 வார்டுகளில் மட்டுமே இந்திரா உணவகம் செயல்பட உள்ளது. இந்திரா உணவகத்திற்காக பூங்கா, விளையாட்டு மைதானங்களில் உள்ள இடங்களை ஆக்கிரமித்து இருப்பதாக தேவையில்லாமல் குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. பூங்காவுக்கு சொந்தமான இடங்களை மாநகராட்சி ஆக்கிரமிக்கவில்லை. அனைத்து இந்திரா உணவகத்திலும் ரகசிய கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இருக்கும்.

இவ்வாறு மேயர் பத்மாவதி கூறினார். பேட்டியின் போது மாநகராட்சி கமி‌ஷனர் மஞ்சுநாத் பிரசாத் உடன் இருந்தார்.

மேலும் செய்திகள்