தஞ்சையில் நடந்த சுதந்திர தின விழாவில் ரூ.43 லட்சம் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்

தஞ்சையில் நடந்த சுதந்திரதின விழாவில் ரூ.43 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அண்ணாதுரை வழங்கினார்.

Update: 2017-08-15 23:00 GMT
தஞ்சாவூர்,

சுதந்திரதின விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் கலெக்டர் அண்ணாதுரை தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் அவர் திறந்த ஜீப்பில் சென்று போலீசார் அணிவகுப்பை பார்வையிட்டு, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். கலெக்டருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் உடன் சென்றார்.

பின்னர் கலெக்டர் சுதந்திரபோராட்ட தியாகிகளுக்கும், அவர்களின் வாரிசுதாரர்களுக்கும் கதர் ஆடை அணிவித்து கவுரவித்து பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளையும், பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார். மேலும் விழாவில் பங்கேற்ற வெளிநாட்டை சேர்ந்த 14 பேருக்கும் கதர் ஆடை அணிவித்தார்.

இதில் முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் கொடி நாள் மிகை வசூல் சாதனை புரிந்த 8 பயனாளிகளுக்கு வெள்ளி பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 13 பயனாளிகளுக்கு திருமண நிதி உதவித்தொகையும் வழங்கப்பட்டன. 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த 6 பார்வையற்ற மாணவர்களுக்கு உதவித்தொகையும், தாட்கோ மூலம் 1 பயனாளிக்கு ஆட்டோவும் வழங்கப்பட்டன. தாட்கோ மூலம் மேலும் 10 பயனாளிகளுக்கும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 5 பேருக்கும், மாவட்ட பிற்படுத்தப்பட்டார் மற்றும்சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 8 பேருக்கு இஸ்திரி பெட்டிகளும், 16 பேருக்கு விலையில்லா தையல் எந்திரமும் வழங்கப்பட்டன.

வருவாய்த்துறை சார்பில் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியின் கீழ் இறப்பிற்கான நிதி உதவி 3 பேருக்கும், தொழிலாளர் நலத்துறை சார்பில் மாதாந்திர ஓய்வூதியம் 50 பயனாளிகளுக்கும், திருமண உதவித்தொகை ஒருவருக்கும், இயற்கை மரண உதவித்தொகை 3 பேருக்கும், வேளாண்மைத்துறை சார்பில் இடுபொருட்கள் 13 பேருக்கும் வழங்கப்பட்டன. கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் மானியத்துடன் 38 பயனாளிகளுக்கு உதவியும், கூட்டுறவுத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு கடனுதவியும், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில் 7 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதியும், 1 பயனாளிகளுக்கு எல்.ஈ.டி., சோலால் பல்பு மற்றும் விளக்குகள் தயாரிக்க கடனுதவியும் வழங்கப்பட்டன.

சமூகநலத்துறை சார்பில் விலையில்லா தையல் எந்திரம் 30 பயனாளிகளுக்கும், கற்பிப்போம் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் 42 பயனாளிகளுக்கும் என மொத்தம் 263 பயனாளிகளுக்கு ரூ.43 லட்சத்து 53 ஆயிரத்து 142 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

விழாவில் வல்லம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, தஞ்சை தூய இருதய மகளிர் மேல்நிலைப்பள்ளி, பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஜீனியஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, லண்டன் கிருஷ்ணமூர்த்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, இந்திய குழந்தைகள் நல சங்கம், சாக்கோட்டை மாதா மாற்றுத்திறனாளி உயர்நிலைப்பள்ளி, கும்பகோணம் அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஆகிய பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த 450-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து பள்ளி மாணவர்களையும் கலெக்டர் அண்ணாதுரை பாராட்டி சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார்.

இதில் தஞ்சை டி.ஐ.ஜி. லோகநாதன், மாவட்ட வருவாய் அதிகாரி சக்திவேல், பயிற்சி கலெக்டர் சிபிஆதித்யாசெந்தில்குமார், ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராசலம், வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி, முதன்மைக்கல்வி அதிகாரி சுபாஷினி, கால்நடைத்துறை இணை இயக்குனர் மாசிலாமணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரவிச்சந்திரன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் மணி, தாசில்தார் தங்கபிரபாகரன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்