சுதந்திர தின விழாவில் ரூ.11 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் நிர்மல்ராஜ் வழங்கினார்

திருவாரூரில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் 39 பயனாளிகளுக்கு ரூ.11¼ லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் வழங்கினார்.

Update: 2017-08-15 22:45 GMT
திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் தலைமை தாங்கி, தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அப்போது போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். சிறப்பாக பணிபுரிந்தமைக்காக 32 அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

அதனை தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் 3 பேருக்கு ரூ.12 ஆயிரத்து 735, வேளாண்மைத்துறை சார்பில் 4 பேருக்கு ரூ.40 ஆயிரமும், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் 4 பேருக்கு ரூ.17 ஆயிரத்து 76, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 12 பேருக்கு ரூ.2 லட்சத்து 40 ஆயிரமும், தாட்கோ சார்பில் 2 பேருக்கு ரூ.4 லட்சத்து 50 ஆயிரமும் என உள்பட மொத்தம் 39 பயனாளிகளுக்கு ரூ.11 லட்சத்து 33 ஆயிரத்து 571 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். மேலும் புதிய 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை கலெக்டர் நிர்மல்ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் கொண்டாயான்யிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முதலிடமும், நெடும்பலம் அரசு மேல்நிலைப்பள்ளி 2-ம் இடமும், மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி 3-ம் இடமும் பெற்றது. வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை கலெக்டர் நிர்மல்ராஜ் வழங்கினார். இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜான்ஜோசப், மாவட்ட வருவாய் அதிகாரி சக்திமணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தியாகராஜன், உதவி கலெக்டர்கள் முத்து மீனாட்சி (திருவாரூர்), செல்வசுரபி (மன்னார்குடி), மருத்துவகல்லுாரி முதல்வர் மீனாட்சிசுந்தரம், சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார், செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி தனபால், நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் அமிர்தலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்