சுதந்திர தின விழாவில் 336 பயனாளிகளுக்கு ரூ.2¾ கோடியில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்

திருச்சியில் நடந்த சுதந்திர தினவிழாவில் கலெக்டர் ராஜாமணி தேசிய கொடி ஏற்றி 336 பயனாளிகளுக்கு ரூ.2¾ கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Update: 2017-08-15 23:00 GMT
திருச்சி,

திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தினவிழா நேற்று திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கே. ராஜாமணி தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். வண்ணப் பலூன்கள், வெண்புறாக்களை பறக்கவிட்டார். இதனைத் தொடர்ந்து திறந்தவெளி ஜீப்பில் சென்று காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட தியாகிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசுகளையும் வழங்கி கவுரவித்தார்.

அதன் பின்னர் வருவாய்த்துறையில் 25 வருடம் மாசற்றப் பணி புரிந்தமைக்காக 2 அதிகாரிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ், ரூ. 2 ஆயிரத்திற்கான காசோலை மற்றும் கேடயம், வறட்சி நிவாரணம், சீமை கருவேலமுள் அகற்றுதல் மற்றும் அரசுத்தேர்வு ஆகிய பணிகளில் சிறப்பாக பணியாற்றிய 29 அதிகாரிகளுக்கு பாராட்டு சான்று, கேடயம் ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார். சிறப்பான பணிக்காக செய்தி மக்கள் தொடர்பு துறை உதவி இயக்குனர் பாண்டியன், மாவட்ட விளையாட்டு அதிகாரி புண்ணியமூர்த்தி மற்றும் சிறப்பாக பணியாற்றிய டாக்டர்கள், சுகாதாரப்பார்வையாளர்கள், செவிலியர்கள் உட்பட 26 அதிகாரிகளுக்கு பாராட்டுச் சான்று மற்றும் கேடயம் ஆகியவற்றையும் கலெக்டர் வழங்கினார்.

முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு திருமண மானியம் தலா ரூ. 20 ஆயிரத்திற்கான காசோலை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு தலா ரூ. 5 ஆயிரத்து 400 மதிப்பில் மடக்கு சக்கர நாற்காலி, 2 பயனாளிகளுக்கு தலா ரூ. 58 ஆயிரத்து 840 மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் உள்பட மொத்தம் 336 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 80 லட்சத்து 28 ஆயிரத்து 380 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

சுதந்திர தின விழாவையொட்டி திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தன. வந்தே மாதரம், இது நம்ம பூமி, வேற்றுமையில் ஒற்றுமை, இந்தியாவின் இனிய உதயம், இயற்கையை பாதுகாப்போம், நமது நாடும் தேசிய கொடியும், தேசிய ஒருமைப்பாடு என்ற தலைப்புகளில் மாணவிகள் நடத்திய கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய நடனங்கள் மற்றும் மாணவர் களின் சாகச நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தன. சுமார் 1 மணி நேரம் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. கலைநிகழ்ச்சியில் பங்குபெற்ற 930 மாணவ, மாணவிகளை பாராட்டி, பரிசுகளும், பள்ளி நிர்வாகத்திற்கு பாராட்டு கேடயங்களும் வழங்கப்பட்டன.

முன்னதாக சுதந்திர தின விழாவையொட்டி காலை 8.10 மணிக்கு கலெக்டர் ராஜாமணி காந்தி மார்க்கெட் அருகில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். 

மேலும் செய்திகள்