நீட் தேர்வை நிரந்தரமாக ரத்துச்செய்யக்கோரி தடையை மீறி கருப்பு சட்டை அணிந்து ஊர்வலம் சென்ற 15 பேர் கைது

நீட் தேர்வை நிரந்தரமாக ரத்துச்செய்யக்கோரி தடையை மீறி கருப்பு சட்டை அணிந்து ஊர்வலம் சென்ற 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-08-15 23:45 GMT
பொள்ளாச்சி,

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு இந்த ஆண்டு விலக்கு அளிக்க கோரி தமிழக அரசின் அவசர சட்ட வரைவு மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய கோரி நேற்று சுதந்திர தினத்தன்று பொள்ளாச்சியில் கருப்பு சட்டை அணிந்து பேரணி செல்வதாக தமிழ்நாடு மாணவர் மன்றத்தினர், பெரியார் திராவிடர் கழகத்தினர் அறிவித்து இருந்தனர். இதற்கு போலீசார் அனுமதி கொடுக்கவில்லை.

இந்த நிலையில் பொள்ளாச்சியில் தடையை மீறி கருப்பு சட்டை அணிந்து ஊர்வலமாக செல்ல முயன்றனர். இந்த போராட்டத்துக்கு பெரியார் திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் நாகராசன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மாணவர் மன்ற ஒருங்கிணைப்பாளர் சண்முகவேல் பிரபாகரன், அமைப்பாளர் தினேஷ், திராவிடர் விடுதலை கழக அரிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தடையை மீறி ஊர்வலமாக சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இதையடுத்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

 பின்னர் போலீசார் தடையை மீறி ஊர்வலமாக செல்ல முயன்ற 15 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை போலீஸ் திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.

மேலும் செய்திகள்