கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகில் இயற்கை நீர்வள பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2017-08-16 22:30 GMT

வேலூர்,

கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வலியுறுத்தி வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகில் இயற்கை நீர்வள பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் 5 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

இயற்கை நீர்வள பாதுகாப்பு இயக்கம் சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதன்படி வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகேயும் ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ. அப்துல்பாசித் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் ஆர்.காந்தி, ஏ.பி.நந்தகுமார், கார்த்திகேயன், ஈஸ்வரப்பன், நல்லதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய மாவட்ட அவைத்தலைவர் முகமதுசகி வரவேற்றார்.
இழப்பீடு

ஆர்ப்பாட்டத்தின்போது வறட்சி காரணமாக மரணமடைந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், வறட்சியால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், பயிர்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். பயிர் காப்பீட்டு தொகையை வழங்க வேண்டும். காப்பீட்டை தனியார் வங்கிகளுக்கு கொடுக்க கூடாது. மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்று குழு அமைக்க வேண்டும். கரும்பு பாக்கி பணத்தை உடனடியாக வழங்க வேண்டும்.

கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் விலை நிர்ணயிக்க வேண்டும். தென்பெண்ணை, பாலாறு (கல்லாறு வழியாக) இணைப்பு கால்வாய் திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும். பாலாற்றில் தண்ணீரை சேமிக்க தடுப்பணைகள் கட்ட வேண்டும். மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.

இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நீல.சந்திரகுமார், தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில துணை பொதுசெயலாளர் சுதாகர், தி.மு.க. விவசாய அணி, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமை கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், த.மா.கா., தமிழ்நாடு விவசாய தொழிலாளர் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, திராவிடர் கழகம் உள்பட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு பின்னர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறுகையில், ‘ஆந்திர அரசு பாலாற்றில் 32 இடங்களில் தடுப்பணைகள் கட்டியுள்ளது. ஆனால் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட தடுப்பணை கட்டவில்லை. தடுப்பணை கட்டினால் மணல் அள்ள முடியாது. எனவே அரசு தடுப்பணை கட்டுவதில் தயக்கம் காட்டுகிறது’ என்றார்.

மேலும் செய்திகள்