கிராமிய அஞ்சல் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் தபால் சேவை பாதிப்பு

கிராமிய அஞ்சலக ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் 354 கிராமிய தபால் நிலையங்கள் திறக்கப்படவில்லை. இதனால் தபால் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது.

Update: 2017-08-16 22:45 GMT
கீரமங்கலம்,

கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு 8 மணி நேரம் வேலை வழங்கி இலாகா ஊழியராக்க வேண்டும், ஓய்வூதியம் வழங்க வேண்டும், கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு இலக்கு நிர்ணயம் செய்து அதிகாரிகள் மிரட்டுவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் சுமார் 750 கிராமிய அஞ்சல் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

தபால் சேவை பாதிப்பு

இந்த வேலை நிறுத்தம் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் 354 கிராமிய தபால் நிலையங்கள் திறக்கப்படவில்லை. கீரமங்கலம் தபால் நிலையத்தின் கீழ் இயங்கி வரும் கொத்தமங்கலம், நகரம், காசிம்புதுப்பேட்டை, மேற்பனைக்காடு கிழக்கு, மேற்கு பெரியாளூர், ஆவணத்தான்கோட்டை, எருக்கலக்கோட்டை, பூவற்றக்குடி, பூவை மாநகர், திருநாளூர், குளமங்கலம், பனங்குளம் ஆகிய 13 கிராமிய தபால் நிலையங்கள் திறக்கப்படவில்லை. மேலும் 13 கிராமிய தபால் நிலைய ஊழியர்களும் கோட்ட துணை செயலாளர் வீரையா தலைமையில் கீரமங்கலம் தபால் நிலையம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 354 கிராமிய தபால் நிலையங்கள் திறக்கப்படாததால் தபால் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்