பெண்ணை தாக்கிய மர்மநபர்களை கைது செய்யக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

கடலூர் முதுநகர் அருகே கிராம மக்கள் சாலை மறியல் பெண் மீது தாக்கியவர்களை கைது செய்யக்கோரி நடந்தது.

Update: 2017-08-25 22:30 GMT

கடலூர்முதுநகர்,

கடலூர் முதுநகர் அருகே உள்ள நொச்சிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் பாபு, விவசாயி. இவரது மனைவி மலர்கொடி (வயது 35). இவர்களுக்கு பிரியதர்ஷினி(12) என்ற மகளும், புஷ்பராஜ்(10) என்ற மகனும் உள்ளனர். நேற்று முன்தினம் மாலை மலர்கொடி நொச்சிக்காடு அருகே உள்ள அவர்களது நிலத்துக்கு விறகு சேகரிக்க சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு வந்த சில மர்மநபர்கள் உருட்டுக்கட்டையால் மலர்கொடியை திடீரென சரமாரியாக தாக்கினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். பின்னர் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த அவரது கணவர் பாபு, மலர்கொடியை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து கடலூர் துறைமுகம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் நேற்று காலை கடலூர் சிதம்பரம் சாலையில் செம்மாங்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே திடீரென நொச்சிக்காடு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 இதுபற்றி தகவல் அறிந்த கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு நரசிம்மன், இன்ஸ்பெக்டர்கள் சுந்தர்ராஜன், சரவணன், மற்றும் தாசில்தார் பாலமுருகன், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கிராம மக்கள், கடலூர் அரசு மருத்துவமனையில் காயமடைந்த மலர்கொடிக்கு உரிய முதலுதவி சிகிச்சை அளிக்காமலேயே புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஜிப்மர் மருத்துவமனையில் மலர்கொடிக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் மலர்கொடியை தாக்கிய மர்மநபர்களை உடனே கைது செய்யவேண்டும், மனநிலை பாதிக்கப்பட்ட மலர்கொடியின் மகள் பிரியதர்ஷினிக்கு அரசு உதவித்தொகை வழங்க வேண்டும் என்று கூறினர்.

 இதற்கு போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதை ஏற்ற கிராம மக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்