எங்களுக்கு 80 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது தங்க தமிழ்செல்வன் எம்.எல்.ஏ. பேட்டி

எங்கள் எண்ணிக்கை 80–ஐ தாண்டும் என்று தங்க தமிழ்செல்வன் எம்.எல்.ஏ. கூறினார்.

Update: 2017-08-25 23:32 GMT

புதுச்சேரி,

புதுவையில் டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. தங்க தமிழ்செல்வன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

நாங்கள் தங்கி இருந்த ஓட்டலில் ஆன்–லைன் மூலம் அறைகளை ஏற்கனவே முன்பதிவு செய்துள்ளனர். இதனால் வேறு வழியின்றி நாங்கள் வேறு ஓட்டலுக்கு செல்கிறோம். புதுவையில் நாங்கள் எத்தனை நாட்கள் தங்குவோம் என்பது பற்றி எங்களுக்கு தெரியாது. பிரச்சினைக்கு உரிய தீர்வு காணும் வரை அல்லது அடுத்தகட்ட முடிவு எடுக்கும் வரை புதுவையை விட்டுச் செல்ல மாட்டோம்.

துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கண்டிப்பாக இங்கு வருவார். அவர் எங்களை சந்திக்க இருக்கிறார். அவர் எப்போது வேண்டுமானாலும் வரலாம். அதன் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும்.

சட்டசபை கூட்டத்தொடரில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த போது தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 35 பேர் சபாநாயகரை சுற்றிநின்று இடையூறு செய்தார்கள். மேலும் தாக்கினார்கள். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அன்று நாங்கள் அவரை பாதுகாத்தோம். ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த 9 எம்.எல்.ஏ.க்கள் எங்களுக்கு எதிராக வாக்களித்தனர். அவர்கள் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் இன்று 19 பேர் மீது நடவடிக்கை எடுப்பதாக நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

எந்த தவறும் செய்யாத அப்பாவிகள் நாங்கள். எங்கள் மீது நடவடிக்கை எடுப்பதா? ஜனநாயக நாட்டில் முதல்–அமைச்சரை மாற்ற வேண்டும் என்று கூறக்கூடாதா? அதில் என்ன தவறு உள்ளது. நாங்கள் தீண்டத்தகாதவர்களா? நாங்கள் எதையும் சட்ட ரீதியாக சந்திப்பதற்கு தயாராக உள்ளோம்.

எங்கள் தரப்பு ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 80–ஐ தாண்டும். பெரும்பான்மையான எம்.எல்.ஏக்கள் எங்களிடம் தான் உள்ளனர். இதை விரைவில் நிரூபிப்போம். பலர் மனதளவில் எங்களோடு உள்ளனர். அது விரைவில் வெளிப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்