பழனி அருகே 18–ம் நூற்றாண்டை சேர்ந்த பால் தொட்டி கண்டுபிடிப்பு

பழனி அருகே 18–ம் நூற்றாண்டை சேர்ந்த பால்தொட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Update: 2017-08-26 22:00 GMT

பழனி,

பழனி அருகே உள்ளது தலைக்கருத்தநாயக்கன்புதூர். இந்த பகுதியில் 18–ம் நூற்றாண்டில் கல்லால் செய்யப்பட்ட பால் தொட்டி இருந்ததை அப்பகுதி மக்கள் பார்த்து ஆச்சரியம் அடைந்தனர். இதுகுறித்து வரலாற்று ஆர்வலர் கமலக்கண்ணன் என்பவர், தொல்லியல் ஆய்வாளர்களுக்கு தகவல் கொடுத்தார்.

அதன்பேரில் பழனி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான நந்திவர்மன், வரலாற்றுத்துறை ஆசிரியர் ராஜேஸ்வரி ஆகியோர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அந்த பால்தொட்டி 2.5 அடி நீளமும், 2 அடி அகலமும் இருந்தது. மேலும் அது ஒரே கல்லினால் செய்யப்பட்டு இருந்தது.

இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் நந்திவர்மன் கூறும்போது, ‘18–ம் நூற்றாண்டில் மதுரையை விஜயநகர பேரரசு கைப்பற்றியது. அப்போது படைபிரிவின் ஒரு பகுதியினர் மதுரையில் பெற்ற வெற்றிக்கு பின் நீர்வளமும், நில வளமும் மிக்க பசுமையான மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை நோக்கி வந்தனர்.

அப்படி வந்த படைவீரர்கள் ஆங்காங்கே தங்களுடைய பெயரால் கிராமங்களை உருவாக்கி விவசாயம் செய்ததோடு, கால்நடைகளையும் வளர்த்து வந்தனர். அவ்வாறு வந்த படைத்தளபதிகளில் ஒருவர் தலைக்கருத்தநாயக்கர். அவருடைய பெயராலேயே தற்போது இந்த ஊர் தலைக்கருத்தநாயக்கன்புதூர் என்றழைக்கப்படுகிறது.

அவருக்கு பின் அவருடைய வாரிசுதாரர்கள், ஊர் தலைவராகவும், மொத்த நில புலன்களுக்கு சொந்தக்காரர்களாகவும் இருந்து வந்தனர். அவர்களிடம் அப்பகுதியை சேர்ந்த மக்கள் வேலை செய்து வந்தனர். தொழிலாளர்களின் குழந்தைகள் மற்றும் ஊர் மக்களின் தேவைக்காக பால் வழங்குவதற்கு இதுபோன்ற கல் தொட்டிகளை செதுக்கி வைத்துள்ளனர்.

இந்த தொட்டிகளில் சேமிக்கப்படும் பாலை அந்த ஊரில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். மண்பானையில் சேமிக்கப்பட்டால் பானை உடைந்து பால் வீணாகிவிடும். இதற்காக நிரந்தர தீர்வாக ஒரே கல்லால் பால் தொட்டியை செதுக்கியுள்ளனர். இதனை அரசு அருங்காட்சியகத்தில் வைத்தால் வரலாற்று ஆர்வலர்களுக்கு ஒரு காட்சி பொருளாக விளங்கும்’ என்றார்.

மேலும் செய்திகள்