கொச்சினுக்கு புறப்பட்ட விமானம் அவசரமாக தரையிறக்கம்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக கொச்சினுக்கு புறப்பட்ட விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

Update: 2017-08-26 21:58 GMT

மும்பை,

மும்பை விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் அதிகாலை 5.30 மணியளவில் ஏர் இந்தியா விமானம் ஒன்று கேரள மாநிலம் கொச்சினுக்கு புறப்பட்டது. விமானத்தில் 150 பயணிகள் மற்றும் சிப்பந்திகள் இருந்தனர்.

இந்தநிலையில் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் அதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதுகுறித்து விமானி உடனடியாக மும்பை விமானநிலைய கட்டுபாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து அந்த விமானத்தை தரையிறக்க அனுமதி வழங்கப்பட்டது.

இதையடுத்து விமானி அவசரமாக விமானத்தை மும்பை விமான நிலையத்தில் தரையிறக்கினார். இதனால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்தநிலையில் கோளாறு ஏற்பட்ட விமானத்தை என்ஜினீயர்கள் உடனடியாக சரிபார்க்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.

இதையடுத்து அந்த விமானம் ரத்து செய்யப்பட்டது. பயணிகள் மதியம் 1 மணியளவில் மாற்று விமானத்தில் கொச்சின் அனுப்பி வைக்கப்பட்டனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் தரையிறக்கப்பட்ட சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்