இமானுவேல் சேகரன் நினைவு தினம்: வாகனங்கள் வந்து செல்லும் வழித்தடங்கள் கலெக்டர் ஆய்வு

தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்திற்கு வாகனங்கள் வந்து செல்லும் வழித்தடங்களை மாவட்ட கலெக்டர் லதா மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் ஆய்வு செய்தனர்.

Update: 2017-09-09 22:30 GMT

சிவகங்கை,

தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் நாளை (11–ந்தேதி) கடைபிடிக்கப்படுகிறது. மேலும் அவரது நினைவு தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள நினைவிடத்தில் அஞ்சலி செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் இருந்து ஏராளமானோர் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த செல்வார்கள். இதுதவிர வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோரும் சிவகங்கை மாவட்டத்தின் வழியாக சென்று அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பி செல்வார்கள்.

இதற்காக மாவட்டத்தில் வாகனங்கள் செல்லும் வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி மதுரையில் இருந்து வருவோர் திருப்புவனம் வட்டம் சிலைமான், திருப்பாச்சேத்தி, மானாமதுரை வழியாகவும், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இளையான்குடி வழியாகவும் வரவேண்டும்.

இந்தநிலையில் வாகனங்கள் செல்லும் வழித்தடங்கள் மற்றும் இதற்காக அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடிகளையும் மாவட்ட கலெக்டர் லதா நேரில் சென்று ஆய்வு செய்தார். திருப்புவனம் வட்டம் சிலைமான், கொந்தகை, முனியாண்டிபுரம், பசியாபுரம், கீழடி, பாட்டம், பொட்டப்பாளையம், மணலூரில் அமையவுள்ள போலீஸ் சோதனைச்சாவடிகளை நேரில் ஆய்வு செய்தார். இதேபோல் மானாமதுரை வட்டம் மேலப்பசலை, இளையான்குடி வட்டத்தில் அதிகரை, முள்ளியரேந்தல், மஞ்சள்பட்டினம் போலீஸ் சோதனைச்சாவடி, பரமக்குடி சாலை செல்லும் சோதனைச்சாவடிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், துணை சூப்பிரண்டு மங்களேசுவரன், திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி வட்டாட்சியர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்