வடுவூர் ஏரியை தூர்வார வலியுறுத்தி தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்படும்

வடுவூர் ஏரியை தூர்வார வலியுறுத்தி தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் என டி.ஆர்.பி. ராஜா எம்.எல்.ஏ. கூறினார்.

Update: 2017-09-09 22:45 GMT
வடுவூர்,

மன்னார்குடி சட்டசபை தொகுதிக்குட்பட்ட வடுவூர் ஏரியை டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ. நேற்று ஆய்வு செய்தார். அப்போது ஏரியின் தென்கரை பகுதியில் 30 மீட்டர் தூரத்துக்கு மண் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஏரியில் படிந்துள்ள மண் விவசாயத்துக்கு உகந்தது என்பதால் அதனை எடுத்து பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த ஏரியை தூர்வாரவும், விவசாயிகள் தங்களது விளை நிலத்துக்கு ஏரியில் படிந்துள்ள மண்ணை எடுத்துச்சென்று பயன்படுத்தவும் அனுமதி வேண்டும் என நான் சட்டசபையில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். எனவே வடுவூர் ஏரியை தூர்வார வலியுறுத்தியும், ஏரியில் படிந்துள்ள மண்ணை எடுத்து விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வலியுறுத்தியும் தி.மு.க. சார்பில் விரைவில் கையெழுத்து இயக்கம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அவருடன் நீடாமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் மாயவநாதன், வடுவூர் தென்பாதி ஊராட்சி செயலாளர் தாமரைச்செல்வன், ராஜசேகரன், இளவழகன், ராஜா, ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் சிவச்சந்திரன் ஆகியோர் இருந்தனர். 

மேலும் செய்திகள்