காஞ்சீபுரம் அருகே மணல் கடத்தல்; 17 பேர் கைது

காஞ்சீபுரம் அருகே மணல் கடத்தல் தொடர்பாக 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2017-09-10 22:00 GMT

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தை அடுத்த புள்ளலூர் என்ற இடத்தில் மணல் கடத்தப்படுவதாக காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையொட்டி போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது பாலாற்றில் இருந்து புள்ளலூர் வழியாக மணல் கடத்தியது தெரியவந்தது. உடனே தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் 10 வாகனங்களை போலீசாருடன் சுற்றி வளைத்தார். அதில் வந்த 7 லாரிகளில் 4 லாரிகளில் மணல் இருந்தது. 3 லாரிகள் மணல் கடத்துவதற்கு காலியாக சென்றது.

இதையொட்டி மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 7 லாரிகள், 2 கார், 1 மோட்டார் சைக்கிள் போன்றவற்றை போலீசார் மடக்கி பிடித்து பறிமுதல் செய்தனர்.

இதையொட்டி குண்ணவாக்கத்தை சேர்ந்த சேகர் (வயது 34), சென்னை நெற்குன்றத்தை சேர்ந்த சதீஷ்குமார் (31), திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த வசந்த் (24), சென்னை ஜாபர்கான்பேட்டையை சேர்ந்த ராஜேஷ் (34), நீர்வள்ளூரை சேர்ந்த பழனி (32), சென்னை ஈக்காட்டுத்தாங்கலை சேர்ந்த வேணுகோபால் (40), சென்னை நெசப்பாக்கத்தை சேர்ந்த தண்டபாணி (37), சென்னை திருவேற்காட்டை சேர்ந்த சதீஷ்குமார் (35) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் சென்னை பல்லாவரத்தை சேர்ந்த சசிகுமார் (28), சென்னை திருவேற்காட்டை சேர்ந்த எழிலரசன் (33), வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டையை சேர்ந்த தட்சணா (42), காஞ்சீபுரத்தை சேர்ந்த ஸ்ரீதர் (38), வாலாஜாபேட்டையை சேர்ந்த ராஜபிரகாஷ் (42), சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (42), சிறுகாவேரிப்பாக்கத்தை சேர்ந்த கவியரசு (18), ரவி (33), சென்னை கொளத்தூரை சேர்ந்த புருஷோத்தமன் (46) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்