திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது

குலசேகரம் அருகே உள்ள திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

Update: 2017-09-10 23:00 GMT
குலசேகரம்,

குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் திற்பரப்பு அருவியும் ஒன்று. இங்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் பாய்வதால் சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பண்டிகை நாட்களிலும், சனி, ஞாயிறு போன்ற விடுமுறை தினங்களிலும் கூட்டம் அலைமோதும்.

உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களும், கேரளா போன்ற பிற மாநிலங்களை சேர்ந்தவர்களும் குடும்பம்– குடும்பமாக வந்து செல்கிறார்கள். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து, சிறுவர் பூங்காவில் விளையாடி, அருவியில் மேல் பகுதியில் உள்ள தடுப்பணையில் படகு சவாரி செய்து மகிழ்கிறார்கள்.

சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

தற்போது குமரி மாவட்ட மலையோர பகுதிகளில் அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், திற்பரப்பு அருவியில் மிதமான தண்ணீர் பாய்கிறது. இந்தநிலையில் விடுமுறை தினமான நேற்று அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். குறிப்பாக ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், இளம்பெண்கள் என ஏராளமானோர் குடும்பம், குடும்பமாக வந்து குவிந்தனர். அவர்கள் அருவியில் குளித்து, சிறுவர் பூங்காவில் விளையாடி குதூகலத்துடன் வீடு திரும்பினர்.

இதுபோல், மாத்தூர் தொட்டிப்பாலம், குளச்சல் கடற்கரை போன்ற பகுதிகளிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

மேலும் செய்திகள்