விளைநிலங்களுக்குள் கூட்டமாக படையெடுத்த 15 யானைகள்

குடியாத்தம் அருகே விளைநிலங்களுக்குள் கூட்டமாக படையெடுத்த 15 யானைகள் நெல் பயிர்களை மிதித்து நாசப்படுத்தியதோடு மாமரங்களையும் சேதப்படுத்தியது.

Update: 2017-09-11 00:10 GMT

குடியாத்தம்,

குடியாத்தம் அருகே விளைநிலங்களுக்குள் கூட்டமாக படையெடுத்த 15 யானைகள் நெல் பயிர்களை மிதித்து நாசப்படுத்தியதோடு மாமரங்களையும் சேதப்படுத்தியது. விடிய விடிய யானைகளின் பிளிறல் சத்தத்தால் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் இருந்தவர்கள் கலக்கம் அடைந்தனர்.

குடியாத்தம் வனச்சரகம் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். ஆந்திர மாநில எல்லையோரம் இது அமைந்துள்ளது. தமிழக வனப்பகுதியை ஒட்டிய ஆந்திர மாநில வனப்பகுதியில் கவுண்டன்ய யானைகள் சரணாலயம் உள்ளது. இங்கு மான்கள், கரடிகள், சிறுத்தை புலிகள், காட்டுப்பன்றி, செந்நாய்களும் அதிக அளவில் வசிக்கின்றன.

சமீப காலமாக கவுண்டன்ய சரணாலயத்திலிருந்து குடியாத்தம் பகுதிக்கு யானைகள் இடம் பெயர்ந்து வனப்பகுதியை ஒட்டியுள்ள விளைநிலங்களை நாசம் செய்து வருகிறது. கோடைகாலத்தில் தண்ணீர் மற்றும் உணவு பற்றாக்குறையால் இவை அடிக்கடி வந்தன. தற்போது வனப்பகுதியில் தொடர் மழை பெய்வதால் தண்ணீர் பற்றாக்குறையும் தீர்ந்து விட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இரவு 8 மணியளவில் குடியாத்தத்தை அடுத்த சைனகுண்டா கிராமம் அருகே உள்ள விளை நிலங்களுக்குள் 4 குட்டி யானைகள் உள்பட 15 யானைகள் கூட்டமாக புகுந்தன. அந்த யானைகள் பிளிறியபடியே அங்குள்ள சந்திரபாபு, பாண்டியன், பலராமன், ஆனந்தன், மேகநாதன், சீனிவாசலு ஆகியோரது விளைநிலங்களுக்குள் புகுந்தன.

அவை அங்கு பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களை மிதித்து நாசப்படுத்தியதோடு ‘மா’ மரங்களையும் முறித்து சேதப்படுத்தியது. அதன்பிறகும் வெறி அடங்காத யானைகள் பிளிறியபடியே இருந்தன. அந்த சத்தத்தால் குடியிருப்பில் உள்ளவர்கள் கலக்கம் அடைந்தனர். இதனிடையே வயலில் காவலுக்கு இருந்த சந்திரபாபுவின் மருமகள் யசோதா யானைகளை பார்த்ததும் தப்பித்தோம், பிழைத்தோம் என ஊருக்குள் ஓடினார். அங்கு வசிப்பவர்களுக்கு தகவல் அளித்த அவர் வனத்துறையினருக்கும் தெரிவித்தார்.

இதனையடுத்து வனக்காப்பாளர் வடிவேல், வனக்காவலர் சந்திரன், வனராஜ், சிவன் மற்றும் கிராம பொதுமக்கள் யானைகள் முகாமிட்டிருந்த இடங்களுக்கு தீப்பந்தங்களுடன் விரைந்து வந்தனர். பட்டாசுகளை வெடித்தும், தீப்பந்தங்களை காட்டியும் தாரை, தப்பட்டை அடித்தும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். போக்கு காட்டிய யானைகள் சிறிது நேரத்திலேயே மீண்டும் அதே பகுதிக்கு திரும்பின. இதனை தொடர்ந்து வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் இரவில் பலமணி நேரம் போராடி யானைகளை காட்டிற்குள் விரட்டினர்.

இது குறித்து சந்திரபாபுவின் மருமகள் யசோதா (வயது 30) என்பவர் கூறியதாவது:–

சனிக்கிழமை இரவு நெற்பயிருக்கு காவலாக நிலத்தில் கொட்டகையில் இருந்தேன். அப்போது இரவு 8 மணி அளவில் கொட்டகைக்கு அருகே யானைகள் கூட்டமாக வந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த நான் கூச்சலிட்டபடி உயிர் பிழைக்க தப்பி ஓடினேன்.

மேலும் அருகில் உள்ள வனத்துறை அலுவலகத்திற்கும் தகவல் தெரிவித்தேன். பின்னர் சுமார் 45 நிமிடங்கள் கழித்து வனத்துறையினர் வந்து பொதுமக்களுடன் சேர்ந்து யானைகளை விரட்டினர். மேலும் யானைகள் குடியிருப்புகளுக்கு மிக அருகில் சுமார் 200 மீட்டருக்குள் வந்துள்ளது. இதனால் இரவு முழுவதும் நாங்கள் அச்சத்துடனே இருந்தோம். இதற்கு வனத்துறையினர் நிரந்த தீர்வு காண வேண்டும்.

மேற்கண்டவாறு அவர் கூறினார்.

கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்த நிலையில் இந்த ஆண்டுதான் மழை பெய்து வருகிறது. இதனால் விவசாய சாகுபடி பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால் யானைகள் இவற்றை நாசம் செய்வதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். எனவே யானைகள் விளைநிலங்களுக்குள் வருவதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை வனத்துறையினர் எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் செய்திகள்