மும்பையில் இடி, மின்னலுடன் பலத்த மழை

மும்பையில் அதிகாலையில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை 4 மணி நேரம் கொட்டி தீர்த்தது.

Update: 2017-09-13 22:33 GMT
மும்பை,

மராட்டியத்தில் பருவமழை பெய்து வருகிறது. ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் கனமழை பெய்தது. இதன் காரணமாக பெருநகரங்களுக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள், அணைகள் நிரம்பின. மும்பையில் கடந்த மாதம் 29-ந்தேதி பேய் மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக மும்பை நகரமே தண்ணீரில் தத்தளித்தது. அதன்பின்னர் மழையின் தீவிரம் குறைந்தது.

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நகரில் மழை பெய்யவில்லை. மாறாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மதிய நேரங்களில் உச்சி வெயில் மண்டையை பிளந்தது. இரவு நேரத்தில் புழுக்கத்தால் மக்கள் அவதி அடைந்தனர்.

கனமழை

இந்தநிலையில், நேற்று அதிகாலை 2 மணிக்கு இடி, மின்னலுடன் திடீரென பலத்த மழை பெய்தது. இந்த மழை விடாமல் அதிகாலை 6 மணி வரையிலும் 4 மணி நேரம் கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக தெருக்களிலும், சாலைகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

இந்த 4 மணி நேரத்தில் மட்டும் மும்பையில் 10 செ.மீ. மழை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. கனமழையின் காரணமாக பாதசாரிகள் செல்லும் சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கின. காட்கோபர் காமராஜ் நகரில் உள்ள சுரங்கப்பாதையில் தேங்கிய தண்ணீரின் காரணமாக அந்த வழியாக நடந்து சென்றவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள். பின்னர் அந்த தண்ணீர் மோட்டார் மூலம் உறிஞ்சி வெளியேற்றப்பட்டது.

மும்பையில் மழை பெய்து கொண்டிருந்த அதே நேரத்தில் தானே, நவிமும்பை, பால்கர் பகுதிகளிலும் கனமழை கொட்டித்தீர்த்தது. 

மேலும் செய்திகள்