வடகிழக்கு பருவ மழை: நோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை

வடகிழக்கு பருவ மழை காரணமாக நோய் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள நகராட்சிகளுக்கு சுகாதாரதுறை அறிவுறுத்தி உள்ளது.

Update: 2017-09-14 22:00 GMT
தாம்பரம், 

கொசுக்களால் பரவும் நோய்கள் மற்றும் வடகிழக்கு பருவ மழை காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை புறநகரில் உள்ள பல்லாவரம், தாம்பரம், அனகாபுத்தூர், செம்பாக்கம், பம்மல், மறைமலைநகர் நகராட்சிகள் மற்றும் கண்டோன்மென்ட் கழகம் சார்ந்த சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், நகர சுகாதார மைய மருத்துவ அலுவலர்கள், நகர சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்ட ஆய்வு கூட்டம் சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு பல்லாவரம் நகராட்சி ஆணையாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். இதில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துணை இயக்குனர் பழனி, கலந்து கொண்டு வடகிழக்கு பருவ மழை காலங்களில் எடுக்க வேண்டிய நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஊழியர்களுக்கு விளக்கி கூறினார்.

நோய் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கும்படியும் நகராட்சிகளுக்கு சுகாதாரதுறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

இது தொடர்பாக பல்லாவரம் நகராட்சி ஆணையாளர் சிவக்குமார் கூறியதாவது:–

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

பல்லாவரம் நகராட்சி பகுதியில் வடகிழக்கு பருவ மழை காலங்களில் நோய் பாதிப்பு ஏற்படாதவாறு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க நகராட்சி ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியை தடுக்கவும், நன்னீரில் உற்பத்தியாகும் கொசு புழுக்கள் உற்பத்தியை தடுத்து, காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் அந்த பகுதிகளில் கொசு மருந்து புகை அடிக்கவும், பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் 5 நாட்களுக்கு தொடர்ச்சியாக நிலவேம்பு கசாயம் வழங்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

ஒத்துழைக்க வேண்டும்

பொதுமக்கள் நன்னீரில் உருவாகும் கொசுக்கள் உற்பத்தியை தடுக்க நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு உள்ள ஊழியர்கள் அளிக்கும் அறிவுரைகளை ஏற்று ஒத்துழைக்க வேண்டும்.

தொடர்ந்து அலட்சியமாக இருந்து கொசு உற்பத்தியை தடுக்காமல் நோய் பாதிப்புகளை ஏற்படுத் துபவர்கள் மீது பொது சுகாதார சட்டப்படி அறிவிப்பு வழங்கி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.  

மேலும் செய்திகள்