113 பேருக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் லதா வழங்கினார்

சிவகங்கையை அடுத்த கூட்டுறவுப்பட்டியில் நடந்த குறைதீர்க்கும் முகாமில் ரூ.13 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் 113 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் லதா வழங்கினார்.

Update: 2017-09-14 22:45 GMT
சிவகங்கை,

சிவகங்கையை அடுத்த கூட்டுறவுப்பட்டி கிராமத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கலெக்டர் லதா தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காஞ்சனா, சிவகங்கை கோட்டாட்சியர் சுந்தரமூர்த்தி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். முகாமில் 113 பயனாளிகளுக்கு ரூ.13 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

பின்னர் கலெக்டர் லதா கூறியதாவது:- மாவட்டத்தில் 8 ஆயிரம் கண்மாய்கள் உள்ளன. இவை உறுதியளிக்கப்பட்ட நீர்ப்பாசன கண்மாய்கள் மற்றும் மழையை நம்பி உள்ள கண்மாய்கள் என இரண்டு வகைகளாக உள்ளன. மழை காலத்தில் கிடைக்கும் நீரை வீணாக்காமல் வரத்துக்கால்வாய் மற்றும் கண்மாய்களை தூர்வாரி அந்த நீர் வளத்தை பயன்படுத்த வேண்டும். மேலும் அந்த நீரை பயன்படுத்தி தற்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்ப நீண்டகால பயிர்களுக்கு பதிலாக குறுகிய கால பயிர்களை சாகுபடி செய்து அதிக மகசூல் பெறலாம்.

மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.176 கோடி பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் மண்வளத்தை பெருக்க மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் நமது மாவட்டத்தில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடப்படவுள்ளன. வீடுகள்தோறும் தனிநபர் கழிப்பறை கட்ட வேண்டும். சுத்தம் மற்றும் சுகாதாரம் சேர்ந்தால் நோய்கள் வராமல் இருக்கும். எனவே பொதுமக்கள் இந்த திட்டத்திற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். திடக்கழிவு மேலாண்மை மூலம் ஊராட்சிகள்தோறும் தூய்மை காவலர் நியமிக்கப்பட்டு, அவர்கள் மூலம் வீடுவீடாய் சென்று மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் பிரித்து பெறப்படும். மேலும் அரசின் திட்டங்கள் குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் “1077” என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்