மீண்டும் திறப்பதற்கு எதிர்ப்பு: டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பேட்டையில் போராட்டம்

பேட்டையில் மீண்டும் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு நேற்று போராட்டம் நடந்தது.

Update: 2017-09-14 21:00 GMT

பேட்டை,

பேட்டையில் மீண்டும் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு நேற்று போராட்டம் நடந்தது.

டாஸ்மாக் கடை

நெல்லையை அடுத்த பேட்டையில் சேரன்மாதேவி ரோட்டில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை ஏற்கனவே மூடப்பட்டது. அந்த டாஸ்மாக் கடை நேற்று மீண்டும் திறக்கப்பட இருந்ததாக தெரிகிறது.

இதனை அறிந்த த.மு.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சியினர் அந்த டாஸ்மாக் கடை முன்பு திரண்டனர். அவர்கள் டாஸ்மாக் கடை திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

போராட்டத்தில் த.மு.மு.க. மாவட்ட தலைவர் உஸ்மான்கான், துணைத்தலைவர் ஜமால், செயலாளர் ஷேக், நாம் தமிழர் கட்சி மகளிர் அணி செயலாளர் குயிலி நாச்சியார், மாதர் சங்க மாவட்ட தலைவர் சூசை திலகவதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், நெல்லை டவுன் உதவி போலீஸ் கமி‌ஷனர் மாரிமுத்து, இன்ஸ்பெக்டர்கள் சோமசுந்தரம், செல்வி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்