7-வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்தக்கோரி தன்னாட்சி கல்வி நிறுவனங்களின் ஊழியர்கள் உண்ணாவிரதம்
அரசு தன்னாட்சி உயர்கல்வி நிறுவனங்களின் ஊழியர்கள் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் புதுவை தலைமை தபால் நிலையம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடந்தது.;
புதுச்சேரி,
7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை தன்னாட்சி உயர்கல்வி நிறுவன ஊழியர்களுக்கும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அரசு தன்னாட்சி உயர்கல்வி நிறுவனங்களின் ஊழியர்கள் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் புதுவை தலைமை தபால் நிலையம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
உண்ணாவிரதத்துக்கு கூட்டு நடவடிக்கைக்குழு ஒருங்கிணைப்பாளர் பரசுராமன் தலைமை தாங்கினார். பாரதீய ஜனதா கட்சியின் துணைத்தலைவர் ஏம்பலம் செல்வம், பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள்.
இந்த உண்ணாவிரதத்தில் புதுவை என்ஜினீயரிங் கல்லூரி, இந்திராகாந்தி மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மகாத்மா காந்தி பல் மருத்துவக்கல்லூரி, அன்னை தெரசா முதுநிலை மற்றும் சுகாதார ஆராய்ச்சி கல்வி நிறுவனம், ராஜீவ்காந்தி கால்நடை மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், புதுவை அனைத்து பாலிடெக்னிக்குகள், பெருந்தலைவர் காமராஜர் என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளில் பணியாற்றும் ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.