விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் காலி பணியிடங்களை நிரப்பக்கோரி விரைவில் போராட்டம்

விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி விரைவில் போராட்டம் நடைபெறும் என தமிழக வாழ்வுரிமை கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2017-09-23 23:15 GMT

விருத்தாசலம்.

விருத்தாசலத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சின்னதுரை தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பாலமுருகன், பொருளாளர் ஜெயராமன், துணை செயலாளர் ஞானசேகரன், மாநில தமிழர்படை தளபதி அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் சேகர் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் பண்ருட்டி வேல்முருகன் கலந்து கொண்டு பேசினார்.

இதில் மகளிரணி கற்பகம், ஜெயா, மாநில நிர்வாகிகள் தமிழ்ச்செல்வன், ராவணன், பாலு, மாவட்ட இளைஞரணி தலைவர் இளஞ்சூரியன் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். நகர தலைவர் ரமேஷ் நன்றி கூறினார். கூட்டத்தின் முடிவில் கட்சி நிறுவனர் பண்ருட்டி வேல்முருகன், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

கூட்டத்தில், மாவட்டந்தோறும் கட்சியை பலப்படுத்த கிராமங்கள் தோறும் கட்சி கிளைகள் அமைத்தும், கொடியேற்ற வேண்டும். விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பக்கோரி விரைவில் மாபெரும் போராட்டம் நடத்துவது, டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை கண்டுகொள்ளாத மத்திய, மாநில அரசுகளை வன்மையாக கண்டிப்பது, நீட் தேர்வில் நியாயமான நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளை தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் வலியுறுத்துவது, டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு பேரணி நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தின் முடிவில் கட்சியின் நிறுவனர் பண்ருட்டி வேல்முருகன் நிருபர்களிடம் கூறுகையில், முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு உடனடியாக தனது மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும். காவேரி, முல்லை உள்ளிட்ட அனைத்து தமிழர் விரோத திட்டங்களை திணித்து தமிழகத்தை அழிக்க நினைக்கும் மோடி அரசை வன்மையாக கண்டிக்கிறேன். கதிராமங்கலம் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் தமிழகத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்