எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடத்துவதற்கு மாவட்ட விளையாட்டு மைதானம் தேர்வு

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை நடத்துவதற்கு புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2017-09-23 23:00 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வருகிற அக்டோபர் மாதம் 14-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் வைரமுத்து, கலெக்டர் கணேஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் ஆகியோர் நூற்றாண்டு விழா நடத்துவதற்கு தேவையான இடத்தினை தேர்வு செய்யும் வகையில் பல்வேறு இடங்களை நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தனர். இதில் புதுக்கோட்டை கவிநாடு கண்மாய், நமணசமுத்திரம் அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடம், புதுக்கோட்டை மன்னர் கல்லூரி விளையாட்டு மைதானம், மாவட்ட விளையாட்டு மைதானம் உள்ளிட்ட இடங்களை நேரில் பார்வையிட்டனர்.

இதில் மாவட்ட விளையாட்டு மைதானம் விழா நடத்துவதற்கு போதுமான பரப்பளவில் இருப்பதாலும், விழாவிற்கு வரக்கூடிய வாகனங்களை நிறுத்தும் வகையில் மைதானத்திற்கு அருகில் அரசினர் மகளிர் கலை கல்லூரி விளையாட்டு மைதானம் இருப்பதாலும், அனைத்து வசதிகளும் கூடிய மாவட்ட விளையாட்டு மைதானத்தை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடத்துவதற்கு ஏற்ற இடமாக தேர்வு செய்தனர்.

மேலும் இந்த மைதானத்தில் நூற்றாண்டு விழா பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும் அறிவுறுத்தினர். இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுப்பிரமணியன், வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) ஜெயபாரதி, தாசில்தார் செந்தமிழ்குமார், அ.தி.மு.க. நகர செயலாளர் பாஸ்கர் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்