நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை அனுமதியின்றி பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை

புதுவை நகரின் அழகை கெடுப்பதால் அனுமதியின்றி பேனர் வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Update: 2017-09-23 21:45 GMT

புதுச்சேரி,

புதுவை நகராட்சி ஆணையாளர் கணேசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:–

புதுச்சேரி நகராட்சியை ஸ்மார்ட் சிட்டி நகரமாக மாற்றுவதற்கு மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதனால் புதுவை நகராட்சி பல தரப்பட்ட முன்னேற்றத்தை எதிர்நோக்கி உள்ளது. இந்த தருணத்தில் நகராட்சியை தூய்மையாகவும், சுத்தமாகவும், அழகாகவும் வைத்திருக்க அனைவரும் பொறுப்பு ஏற்க வேண்டும். இந்தியாவின் முதன்மை மாநிலமாக புதுவை உருவாக வாய்ப்பு உள்ளது. நமது மாநிலத்தின் முன்னேற்றத்தை இந்திய அரசு கண்காணித்து வருகிறது.

ஆனால் புதுவை மாநிலத்தின் அழகை கெடுக்கும் விதமாக பேனர் கலாசாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. அரசியல்வாதிகள் பிறந்தநாள் வாழ்த்துகள், வரவேற்பு விழா எனத்தொடங்கி தற்போது சினிமா போஸ்டர்கள், திருமணம் என எல்லா நிகழ்ச்சிகளுக்கும் பேனர்கள் வைக்கும் கலாசாரம் தலைதூக்கி உள்ளது. இது நகராட்சியின் அழகை கெடுப்பதுடன், சுற்றுலா வளர்ச்சியையும் பாதிக்கிறது.

எனவே புதுவை நகராட்சியின் அனுமதி பெற்ற பிறகே பேனர் வைக்க வேண்டும். அனுமதி பெற்றதற்கான விவரத்தினையும் விளம்பரத்தில் அச்சடிக்க வேண்டும். பேனர்கள் நான்கு வீதி சந்திப்பு மற்றும் வளைவுகளில் வைப்பதை தவிர்க்க வேண்டும். திருமணம் மற்றும் வீட்டு நிகழ்ச்சிகளுக்கான பேனர்கள் கண்டிப்பாக நான்கு வீதி சந்திப்புகளில் வைக்க கூடாது. இதனை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் பேனர் அகற்றப்படுவதுடன் அதற்கான செலவு தொகையும் வசூலிக்கப்படும்.

வீதிகளில் கால்நடைகள் மேயவிடுவது பொதுமக்களுக்கும் இடையூறாகவும், ஆபத்தாகவும் உள்ளது. எனவே தெருக்களில் மேய விடப்படும் கால்நடைகள் பறிமுதல் செய்யப்பட்டு கோசாலைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்