பணிகளை விரைந்து முடிக்க கோரி மேம்பாலத்தில் அமர்ந்து போராட்டம் நடத்திய தே.மு.தி.க.வினர் 70 பேர் கைது

மேம்பால பணிகளை விரைந்து முடிக்க கோரி, மேம்பாலத்தில் அமர்ந்து போராட்டம் நடத்திய தே.மு.தி.க.வினர் 70 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2017-09-24 22:30 GMT

கோவை,

கோவை சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ். காலனி பகுதியில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த மேம்பால பணிகள் முடிவடையாமல் மிகவும் தாமதம் ஆகி வருகிறது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க கோரி கோவை மாநகர் கிழக்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் நேற்று நேதாஜிபுரம் காந்திசிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு மாநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் காட்டன் ஆர்.செந்தில் தலைமை தாங்கினார். மாநில இலக்கிய அணி துணை செயலாளர் சிங்கை சந்துரு, சிங்காநல்லூர் பகுதி செயலாளர் முத்துக்குமார், 59–வது வார்டு செயலாளர் சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் காந்தி சிலையில் இருந்து மேம்பாலம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். பின்னர் அவர்கள் திடீரென்று மேம்பாலத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாரிடம் அனுமதி பெறாமல் மேம்பாலத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தே.மு.தி.க.வினர் 70 பேரை போலீசார் கைது செய்து வரதராஜபுரத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இந்த போராட்டம் குறித்து மாவட்ட செயலாளர் காட்டன் செந்தில் கூறுகையில், எஸ்.ஐ.எச்.எஸ். காலனி பகுதியில் மேம்பால பணிகள் மிகவும் தாமதமாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு மாதத்தில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் தே.மு.தி.க. சார்பில் பொதுமக்களை திரட்டி ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

போராட்டத்தில் அவைத்தலைவர் கேசவன், பொருளாளர் லிங்கம், துணை செயலாளர்கள் பொன்னுராஜ், ஆனந்தகுமார், நிர்வாகிகள் ஜி.பி.சுப்பிரமணி, பழனி, ராமன், செந்தில்குமார், ஆனந்த், தீனதயாளன், பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர். கைதானவர்கள் அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்