அரசு கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து வீடு சேதம்

கணவாய்பட்டியில் அரசு கலைக்கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து வீடு சேதம் அடைந்தது.

Update: 2017-09-24 22:45 GMT
மோகனூர்,

நாமக்கல் மாவட்டம் கணவாய்பட்டியில் மோகனூர் சாலையில் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியை சுற்றிலும் சுமார் 7 அடி உயரத்தில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. கணவாய்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் அருக்காணி (வயது52) என்பவர் வீடு கட்டி தனது மகன் பொன்னுசாமியுடன் வசித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் அந்த பகுதியில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது கல்லூரியின் சுற்றுச்சுவர் சுமார் 100 அடி நீளத்திற்கு இடிந்து விழுந்தது. இந்த சுவர் அருக்காணி வீட்டின் மீது விழுந்தது. இதில் வீடு முற்றிலும் சேதமடைந்தது. மேலும் வீட்டில் இருந்த தட்டுமுட்டு சாமான்கள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தது.

சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த போது அருக்காணி, பொன்னுசாமி ஆகிய 2 பேரும் பக்கத்து வீட்டுக்கு சென்று விட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வருவாய்த்துறை அலுவலர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், இந்த பகுதியை சேர்ந்த ஏராளமான ஏழை, எளிய மக்கள் கல்லூரி சுற்றுச்சுவரை ஓட்டி வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். அவர்களுக்கு பாதுகாப்பான இடம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் செய்திகள்