பாபநாசம் தலையணைக்கு செல்லும் வாயிற்கதவு உடைப்பு போலீசார் விசாரணை

பாபநாசம் தலையணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அங்குள்ள வாயிற்கதவு உடைக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2017-09-30 23:00 GMT
விக்கிரமசிங்கபுரம்,

நெல்லை மாவட்டம் பாபநாசம் தலையணையில் தொடர்ந்து உயிர் இழப்புகள் ஏற்பட்டதால், அதனை தடுப்பதற்கு விக்கிரமசிங்கபுரம் போலீசார் பல்வேறு அறிவிப்பு பலகைகள் வைத்திருந்தனர். ஆனால் அதனையும் மீறி வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் தலையணையில் குளிக்கச் சென்றனர்.

இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் கடந்த மாதம் 6-ந் தேதி முதல் பாபநாசம் தலையணையில் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் பொதுப்பணித்துறை சார்பில் தலையணையில் வாயிற்கதவு போட்டு மூடப்பட்டது. இதனால் பொதுமக்கள் குளிக்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் காலையில் பாபநாசம் தலையணைக்கு செல்லும் வழியில் உள்ள வாயிற்கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் பொதுமக்கள் பலர் குளிக்க சென்றனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் பொதுப்பணித்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக விக்கிரமசிங்கபுரம் போலீசில் புகார் செய்தனர்.

மேலும் பொதுப்பணித் துறையினர் சார்பில் மீண்டும் கதவு போடப்பட்டு வழி அடைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிலர் கதவு அருகே உள்ள சுவரில் ஏறி ஆபத்தான வழியில் சென்று தலையணையில் குளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்