மனத்தளர்ச்சியை விரட்டும்.. மறுமலர்ச்சியை உருவாக்கும்.. கலகலப்பான காதல் ஆய்வுகள்

காதல் இனிப்பையும், கசப்பையும் கலந்து தரும் இளமையான விஷயம். காதலில் தோற்றவர்கள் அந்த கசப்பை மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தவித்துக் கொண்டிருக்க- காதலை தொடர்ந்து கொண்டிருப்பவர்களோ குஷியாக அதில் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Update: 2017-10-15 11:00 GMT
காதல் இனிப்பையும், கசப்பையும் கலந்து தரும் இளமையான விஷயம். காதலில் தோற்றவர்கள் அந்த கசப்பை மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தவித்துக் கொண்டிருக்க- காதலை தொடர்ந்து கொண்டிருப்பவர்களோ குஷியாக அதில் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த காதல் உலகம் முழுக்க நீக்கமற நிறைந்திருப்பதால், இதைப் பற்றிய ஆய்வுகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன!

காதல் ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் கலகலப்பான விஷயங்களை இங்கு தரு கிறோம்..

* மனித உடலுக்கு ஆக்சிஜன் எப்படி அவசியமோ, அதுபோல உள்ளத்திற்கு உயிர்த்துடிப்பு தரும் ஆக்சிஜன் போன்றது காதல். காதலிக்காதவர்களிடமும் காதல் உணர்வு நிறைந்திருக்கிறது.

* மறைத்து வைத்திருந்தாலும் காதல் உணர்வுகள் மனதுக்கு மகிழ்ச்சியையும், கிளர்ச்சியையும் தந்துகொண்டேயிருக்கும். காதலர்கள் காதலிக்கும் தருணத்தில் உடல் ரீதியாகவும், மனோரீதியாகவும் ஆரோக்கியமாக திகழ்வார்கள்.

* காதல் உணர்வு குறைவாக உள்ளவர்களிடம், மனஅழுத்த உணர்வு அதிகமாக இருக்கும். அதிக மன அழுத்தத்திற்கு உள்ளானவர்கள், தங்கள் மீதே காதல் இல்லாதவர்களாகவும், மற்றவர்கள் மீது பாசம் காட்ட தயங்குபவர்களாகவும் இருப்பார்கள். அவர்களிடம் சுயநலம் அதிகமாக இருக்கும். அவர்கள் காதலிக்கப்படாததற்கு அதுவே காரணமாக இருக்கிறதாம். எனவே தங்களை பிறர் விரும்ப வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில் தங்களைத் தாங்களே நேசிக்க வேண்டும். மற்றவர்களிடமும் அன்பும், நேசமும் செலுத்த வேண்டும். அதுவே அவர்களுக்கான காதல் துணையைத் தேடித் தரும்.

* மன அழுத்தம் உடையவர்கள் அடிக்கடி சோர்ந்துவிடுவார்கள். அவர்கள் தம் மீது யாராவது அன்பு செலுத்தமாட்டார்களா என்று ஏங்கிக்கொண்டிருப்பார்கள். ஆனால் காதலித்துக்கொண்டிருப்பவர்கள் விறுவிறுப்பாக சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். மகிழ்ச்சியாகக் காணப்படுவார்கள். இந்த மனநிலையானது அவர்களுக்குள் செயல்திறனை அதிகரிக்கும்.

* நம்மில் பெரும்பாலானவர்கள், நமது கலாசாரத்தில் உயர்வாகச் சொல்லப்பட்ட அனுபவங்கள், கருத்துகளில் இருந்து காதல் உணர்வைப் பெறுகிறார்கள். அதனால் காதல் உணர்வு மேன்மையானதாகக் கருதப்படுகிறது. ஆனால் தற்கால கலாசாரத்தில் காதல் என்பது உண்மைக்கு ஒத்துவராத கற்பனைகளும், பொழுதுபோக்கும் நிறைந்ததாக காணப்படுகிறது. இதுவே பலர் காதலில் சொதப்புவதற்கு காரணமாகிவிடுகிறது. ருசிக்கு ஆசைப்பட்டு ஆரோக்கியமற்ற உணவு உண்ணும் பழக்கத்துடன் இன்றைய காதலை ஒப்பிடலாம். ருசிக்காக உணவு உண்பதுபோல, ஆசைக்காக அவசரமாக காதலை தேர்வு செய்பவர்கள் தோல்வி காண்கிறார்கள்.

காதல் சிறப்பாக அமைய கவனிக்கப்படவேண்டியவைகள்:

* காதலிக்க விரும்புகிறவர்கள் இனக்கவர்ச்சிக்கும்- காதலுக்கும் உள்ள வேறுபாட்டை அறியுங்கள். உடல் ரீதியான ஒரு ஈர்ப்பே இனக்கவர்ச்சி. அது உடலில் கிளர்ச்சியை ஏற்படுத்தலாம். ஆனால் உள்ளத்தில் தூண்டுதலை ஏற்படுத்தாது. இனக்கவர்ச்சி என்பது ஆரோக்கியமற்ற, ஆரம்ப கட்ட உடல் ஈர்ப்பு. தீவிரமான ஹார்மோன் சுரப்புகளால் மூளையில் ஏற்படும் ரசாயனமாற்றங்கள், இனக்கவர்ச்சியை சரியான ஈர்ப்பு என்பதுபோல் உணரவைக்கும். ஆனால் குறுகிய காலத்தில் அந்த எண்ணம் விலகிவிடும். நிஜகாதல் என்பது இனக்கவர்ச்சியைக் கடந்தது. எதிர்பாலினத்தவருடன் ஏற்படும் ஈர்ப்புதான் காதலுக்கு அடிப்படை என்றாலும், அந்த ஈர்ப்பானது பல பரிமாணங்களைக் கடந்துதான் காதலாகப் பரிணமிக்க முடியும்.

* காதலிப்பது ஒரு திறமைதான். அதை அனுபவத்தால் மேம்படுத்திக் கொள்ள முடியும். உணர்ச்சி ரீதியாகவோ, ஹார்மோன்களிலோ அது பதிந்துகிடப்பதில்லை. காதல் மூலம் நீங்கள் அன்பு செலுத்தும் ஆற்றலை வளர்த்துக் கொள்ளமுடியும். நீங்கள் காதலுடன் ஆத்மார்த்தமாக ஐக்கியமாகாவிட்டால், அந்த காதல் பெரும்பாலும் உங்களுக்கு தோல்வியை தந்துவிடும்.

* காதலைக் கற்றுக்கொள்வது என்பது, சிறந்த தகவல்தொடர்புத் திறனை வளர்ப்பதுபோலத்தான். நம்பிக்கையையும், பாசத்தையும் மேம்படுத்தும்வகையில் அணுகுவதே காதலை வளர்ப்பதற்கான வழிமுறை. சோர்வு அடையாமல், சிறந்த புரிதலுடன் செயல்பட வேண்டும். அதற்கு நம்பிக்கை அவசியம். வற்புறுத்தலாலோ, அனுதாபத்தாலோ உருவாகுவது காதல் இல்லை.

* காதலிக்கும்போது இருவரும் சரியாக நடந்துகொண்டாலே காதல் இனிக்கும். காதலரின் நடவடிக்கையில் மாற்றமும், புறக்கணிப்பும் ஏற்படும்போது, அதனால் ஏற்படும் எதிர்விளைவுகள் காதலியிடமும் தெரியும். அப்போதுதான் விரிசலும், பிரிதலும் நிகழ்கிறது. அதனால் உங்களை நீங்கள் சரிசெய்வதன் மூலமே உங்கள் அன்புக்குரியவர்களை ஈர்க்கவும், காதலில் ஜெயிக்கவும் முடியும்.

* காதலில் ஜெயிக்க முதலில் உங்களால் காதலிக்கப்படுகிறவரின் தேவையை அறியுங்கள். அவரது ஆசைகள், தேவைகள், நலன்கள் ஈடேற உங்களால் என்ன செய்ய முடியும் என்று யோசியுங்கள். இதை அறிந்து கொள்வதற்கு நிச்சயம் தனித் திறமை அவசியம். தேவையை அறிந்து நிறைவேற்றும்போது காதல் வலுப்பட்டுவிடும். தேவை என்பது பொருளும், பொருளாதாரமும் சார்ந்தது அல்ல. அன்பையும், நம்பிக்கையையும் சார்ந்தது.

* காதலில், யதார்த்தத்துடன் ஒன்றிணைந்து இயங்கத் தெரிய வேண்டும். உங்கள் நேசத்தை மற்றவர் புரிந்து கொள்ள வேண்டும் என்பது உங்களுக்கு முக்கிய மானதாக இருக்கலாம். அதை அவருக்குத் தெரியப் படுத்த வேண்டியதும் உங்கள் எண்ணமாக இருக்கலாம். ஆனால் அவர் கள் சொல்வதையும் காதில் வாங்கிக் கொள்ள வேண்டும். ‘என் விருப்பம், என் ஆசையை ஏன் புரிந்து கொள்ளவில்லை’, ‘எனக்கு என்ன குறைச்சல்’, ‘பணம் தகுதி பார்த்துத்தான் காதலிப்பார்களா?’ என்று உங்களை நீங்களே குழப்பிக்கொண்டு, மன அழுத்தத்திற்குள் மூழ்கிப்போகக் கூடாது. நல்ல காதலுக்கு பொறுமையும், காத்திருப்பும் மிக அவசியம்.

* உங்கள் உள்ளுணர்வை உங்களால் விரும்பப்படுகிறவர் புரிந்து கொள்ளும் திறனற்றவராக இருக்கலாம். அல்லது உங்களை அவர் வேண்டும் என்றே புறக் கணிக்கவும் செய்யலாம். இந்த இரண்டில் எது நடந்தாலும் உடனே மன அழுத்தத்திற்கு உள்ளாகிவிடாமல், நிதானமாக காரணத்தை ஆராயவேண்டும். ஒவ்வொருவருக்கும் அவரவர் தரப்பு நியாயங்கள் நிறையவே உண்டு. நியாயத்தை அறியாமல், ‘எனக்கு கிடைக்காதவர் யாருக்கும் கிடைக்கக்கூடாது’ என்று ஆவேசம் கொள்ளல்ஆகாது.

* தன் நிலையை வெளிப்படையாக விளக்கும் அவசியமோ, இயலாத சூழலோ இருக்கும்போது காதலி, உங்கள் காதலை நிராகரிக்கலாம். நிறைய யோசித்து உங்கள் காதலை நிராகரித்தால் காதலுக்கான சூழ்நிலை உருவாகவில்லை என்று புரிந்துகொள்ளவேண்டும். உடனடியாகவே உங்கள் காதல் நிராகரிக்கப்படுகிறது என்றால் அவர் விரும்பும் தகுதி உங்களிடம் இல்லை என்பதை உணர வேண்டும்.

* நிராகரிப்பு ஒரு வகையில் மன அழுத்தத்தை உண்டாக்கும் என்றாலும் பரந்த நேசத்தால் அதைத் தாங்கிக் கொண்டு அன்பை வெளிப்படுத்தவும், அந்த இடை வெளியைக் கடந்து வாழ்வில் சாதிக்கவும் உங்களால் முடியும். நீங்கள் தேடிய அன்பு நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும். இறுதியில் அன்பே ஜெயிக்கும். 

மேலும் செய்திகள்