சோமங்கலத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 10–ம் வகுப்பு மாணவன் பலி

சென்னை தரமணியைச் சேர்ந்தவர் கோபிநாத். கூலித்தொழிலாளி. இவரது மகன் சதீஷ் (வயது 15). சிறுவயது முதல் குன்றத்தூரை அடுத்த சோமங்கலம்,

Update: 2017-10-15 23:30 GMT

பூந்தமல்லி,

மேட்டூர் அண்ணா நகரில் உள்ள தனது தாத்தா புருஷோத்தம்மன் வீட்டில் தங்கி அங்குள்ள அரசு பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தான்.

கடந்த சில தினங்களாக டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த சதீஷ் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தான். இந்த நிலையில் நேற்று சதீசுக்கு காய்ச்சல் அதிகமானது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சதீஷ் இறந்து போனான்.

இதேபோல் தமிழகத்தின் பல இடங்களில் டெங்கு காய்ச்சலுக்கு பலர் பலியாகி உள்ளனர். குமரி மாவட்டம் தக்கலை அருகே சாரோடு பகுதியைச் சேர்ந்த 6–ம் வகுப்பு மாணவி மகரிஷா (11), திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வேளூரைச் சேர்ந்த தனியார் ஆஸ்பத்திரி செவிலியர் சண்முகசுந்தரி (27), மன்னார்குடியைச் சேர்ந்த பரிமளா (24), நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த அணிமூர் பெரியகாடு பகுதியைச் சேர்ந்த விவசாயி செந்தில் (41) ஆகியோரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தனர். இவர்களில் பரிமளாவுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது.

மதுரையில் டெங்கு காய்ச்சலுக்கு நேற்று ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்து உள்ளனர். மதுரை மதிச்சியம் நடுத்தெருவைச் சேர்ந்த கார்த்திகா (20), திண்டுக்கல் மாவட்டம் பாப்பம்பட்டியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரது 6 மாத ஆண் குழந்தை ஹாசன் ஆகியோர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் இன்றி நேற்று உயிரிழந்தது.

மேலும் செய்திகள்