கடலூரை பசுமை மிக்க மாவட்டமாக உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் அமைச்சர் பேச்சு

மாநில அளவில் கடலூரை பசுமை மிக்க மாவட்டமாக உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று அமைச்சர் எம்.சி.சம்பத் பேசினார்.

Update: 2017-10-15 23:00 GMT
கடலூர்,

கடலூர் அண்ணா விளையாட்டு மைதானம் மற்றும் சண்முகாநகரில் பசுமை இயக்கத்தின் கீழ் மரக்கன்று நடும் விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமை தாங்கினார். சப்-கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ் முன்னிலை வகித்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா வரவேற்றார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கடலூரை பசுமை மிக்க மாவட்டமாக மாற்ற வேண்டும் என்ற முயற்சியில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில், மாவட்ட நிர்வாகத்தின் ஆதரவுடன் அண்ணா விளையாட்டு மைதானத்தில் 130 மரக்கன்றுகள் நடப்படுகிறது.

இது தவிர சண்முகாநகரிலும் மரக்கன்றுகளை நடுகிறோம். மரக்கன்றுகளை நடுவதோடு மட்டுமின்றி அதை நன்றாக வளர்க்க வேண்டும். அப்போது தான் இந்த திட்டம் 100 சதவீதம் வெற்றி அடையும். பொதுமக்கள் ஒத்துழைப்பு தந்தால் தான் மாவட்டத்தில் அதிக மரக்கன்றுகளை நட்டு பசுமை மிக்கதாக மாற்ற முடியும்.

வடகிழக்கு பருவ மழை பெய்ய இருப்பதால் தற்போது வைக்கப்படும் மரக்கன்றுகள் நன்கு வளரும். கோடை காலத்தில் தொண்டு நிறுவனங்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் தண்ணீர் ஊற்றி மரக்கன்றுகளை பராமரிக்க வேண்டும். மாநில அளவில் கடலூரை பசுமை மிக்க மாவட்டமாக மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.

விழாவில் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு நிஜாமுதீன், மருதவாணன், அனைத்து குடியிருப்போர் சங்கங்களின் கூட்டமைப்பு வெங்கடேசன், சுற்றுச்சூழல் ஆர்வலர் அருள்செல்வம், ஓய்வு பெற்ற வன அலுவலர் சாய்ராம், முன்னாள் நகரசபை தலைவர் குமரன், துணை தலைவர் சேவல்குமார், அ.தி.மு.க. (அம்மா அணி) ஒன்றிய செயலாளர் பழனிசாமி, முன்னாள் கவுன்சிலர்கள் கந்தன், தமிழ்ச்செல்வன், அன்பு, ஆர்.வி.மணி, மாவட்ட பிரதிநிதி வெங்கட்ராமன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ஜே.கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்